/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மேல்நிலைத் தொட்டி பழுது கிராம மக்கள் அச்சம்
/
மேல்நிலைத் தொட்டி பழுது கிராம மக்கள் அச்சம்
ADDED : மே 28, 2024 04:56 AM

விருத்தாசலம், : கவணை கிராமத்தில் பழுதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை இடித்து, புதிதாக கட்டித்தர பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் ஊராட்சி கவணை கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இங்கு 1983ம் ஆண்டில் கட்டிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியும், மற்றொரு மேல்நிலை தொட்டியும் உள்ளது. இரண்டு தொட்டிகள் மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், 1983ல் கட்டிய மேல்நிலைத் தொட்டியை தாங்கி நிற்கும் துாண்களில் சிமென்ட் காரைகள் பெயர்ந்து, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் உள்ளது. மேலும் குடிநீர் கசிந்து வழிந்தோடுவதால், இரண்டு தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் போதுமானதாக இல்லை.
இதனால் கோடை காலத்தில் மக்கள் குடிநீரின்றி சிரமமடைகின்றனர். மேலும் தண்ணீர் தொட்டி அருகே கோவில் இருப்பதால், பக்தர்கள் அச்சமடைந்துள்ளனர். இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, கவணையில் 1983ம் ஆண்டில் கட்டிய மேல்நிலை தொட்டியை இடித்து அகற்றி, புதிதாக கட்டித்தர ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.