மனசாட்சியுடன் பரிசீலனை செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் காட்டம்
மனசாட்சியுடன் பரிசீலனை செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் காட்டம்
ADDED : ஜூன் 30, 2026 07:31 PM
சிதம்பரம்: கூட்டணியில் இருந்த கட்சியினரை வெற்றி பெற வைத்து தகுதியை ஏற்படுத்தி கொடுத்தது தி.மு.க., தான் என, பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ.,. தெரிவித்துள்ளார்
சிதம்பரம் அடுத்த கிள்ளை, குச்சிப்பாளையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு கோவில் திருவிழாவில் நாட்டுவெடி வெடித்த விபத்தில், 20 பேர் படுகாயம் அடைந்து சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள, மாவட்ட அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., அவர்களை சந்தித்து பிரட், பால், பழங்கள் வழங்கி ஆறுதல் கூறினார்.
இதையடுத்து அவர் கூறியதாவது:
தி.மு.க., தலைவர் ஸ்டாலின், பாதிக்கப்பட்டவர்களை பார்க்க உத்தரவிட்டார். டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகின்றனர். மேல்சிகிச்சைக்காக இருவர் தஞ்சை மருத்துவக்கல்லுாரி
மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உடனடியாக நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்.
தி.மு.க., வுடன் கூட்டணியிலிருந்த கட்சியினர் மனசாட்சியுடன் பரிசீலனை செய்ய வேண்டும். கூட்டணியில் இருந்தவர்களை, உழைத்து வெற்றி பெற வைத்து தகுதியை உருவாக்கி தந்துள்ளது தி.மு.க., தான். அவர்களை தற்போது பதவி தருவதாக கூறி மற்ற கட்சியினர் வீடு தேடி வருகிறார் என்றால், அந்த தகுதியை உருவாக்கி கொடுத்தவர் ஸ்டாலின்தான் .
தேர்தலில் ஏற்பட்ட அலையிலும், கூட்டணி கட்சியினர் வெற்றி பெற்றதற்கு காரணம், தி.மு.க., தான் .
வெற்றி பெற்றதனால் தான் த.வெ.க., வினர் அழைத்துள்ளனர்.
அந்த அழைப்பு கொடுக்கும் தகுதியை உருவாக்கியது தி.மு.க., தான். இந்த கூட்டணி, மனம் கோணாமல் 18 ஆண்டுகள் தொடர்ச்சியாக இருந்தது.
ஆளும் கட்சியாக இருந்த போதும், இல்லாத போதும் கூட்டணி கட்சிகளுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்கியர் ஸ்டாலின்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா விஜயகாந்துடன் கூட்டணி வைத்து ஆட்சியமைந்தவுடன், 6 மாதத்திலேயே கூட்டணியை துண்டித்தார். ஆனால் ஸ்டாலின், ஆட்சியில் இருக்கும் போது கூட்டணி கட்சிகளை அரவணைத்து
உரிய அங்கீகாரத்தை வழங்கினார்.
சோதனையான காலத்தில் உறுதுணையாக இருப்பதுதான், உண்மையான நட்புக்கு அடையாளம். தற்போது வைகோ., த.வெ.க., விற்கு சென்றுள்ளார்.
வைகோ தனது கட்சியில் உழைத்தவர்களுக்கு பதவி கொடுக்கவில்லை. லோக்சபா தேர்தலில், மகனுக்குதான் சீட் கொடுத்தார்.
கட்சிக்காக உழைத்த மல்லை சத்யா வெளியேறி புதிய கட்சி தொடங்கியுள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்ற கூட்டணி கட்சி தலைவர்களை விட மனசாட்சியோடு உள்ளார். மற்றவர்கள் மனசாட்சியை மறந்துவிட்டனர். காங்., தலைவர் மாணிக்கம் தாகூர் தி.மு.க., விற்கு பதிலடி கொடுப்போம் என கூறியுள்ளார்.
தி.மு.க., சுமந்த மூட்டை காங்., கட்சி. திமுக தொண்டர்கள் உழைப்பால் குறைந்த ஓட்டுகளில், வெற்றி பெற்றுள்ளனர். நன்றி மறந்து விட்டு மாற்று இடம் போய் பேசி வருகிறார். நாங்கள் நன்றி மறப்பவர்கள் அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
