/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பண்ருட்டி கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
/
பண்ருட்டி கவுன்சிலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு
ADDED : ஜூலை 02, 2024 05:22 AM

கடலுார்: பொதுமக்களுக்கு அடிப்படை வசதி மற்றும் மாணவர்களுக்கு கழிவறை வசதி ஏற்படுத்தக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
பண்ருட்டி நகராட்சி 24வது வார்டு கவுன்சிலர் மோகன் மற்றும் 22வது வார்டு கவுன்சிலர் சரளா மோகன் கொடுத்துள்ள மனு;
வி.ஆண்டிக்குப்பம், நந்தனார் காலனி பகுதியில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவில்லை. இங்கு ஓராண்டாக பொதுகழிவறை பூட்டியுள்ளது. பழுதடைந்த சிமெண்ட் சாலை மற்றும் பிரதான கழிவுநீர் வாய்க்கால் சேதமடைந்துள்ளது. அங்கு புதிய சிமெண்ட் சாலை,
கழிவுநீர் வாய்க்கால் அமைக்க வேண்டும். குடிநீர் தொட்டி பழுதடைந்து, பாசி பிடித்துள்ளது. எல்.பிள்ளையார் கோவில் நகராட்சி குடிநீர் போர்வெல் பழுதடைந்துள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதேபோன்று, 22வது வார்டு காந்தி ரோடு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலை பள்ளியில் 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
இப்பள்ளிகளில் போதிய கழிவறை வசதியில்லாத நிலை உள்ளது.
சுகாதாரமற்ற குடிநீரை பயன்படுத்துவதால், மாணவ, மாணவியருக்கு தொற்று நோய் பரவும் நிலை உள்ளது. எனவே, பள்ளியில் கழிவறை மற்றும் சுகாதாரமான குடிநீர் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.