/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பச்சை நிறத்தில் வீராணம் ஏரி தண்ணீர் சாயக்கழிவு கலந்ததா என மக்கள் அச்சம்
/
பச்சை நிறத்தில் வீராணம் ஏரி தண்ணீர் சாயக்கழிவு கலந்ததா என மக்கள் அச்சம்
பச்சை நிறத்தில் வீராணம் ஏரி தண்ணீர் சாயக்கழிவு கலந்ததா என மக்கள் அச்சம்
பச்சை நிறத்தில் வீராணம் ஏரி தண்ணீர் சாயக்கழிவு கலந்ததா என மக்கள் அச்சம்
ADDED : மே 31, 2024 02:14 AM

காட்டுமன்னார்கோவில்: மேட்டூரில் இருந்து சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்ட தண்ணீர், பச்சை நிறத்தில் உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலுார் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் அமைந்துள்ள வீராணம் ஏரி, இப்பகுதி விவசாயிகளின் உயிர் நாடியாக விளங்கி வருகிறது. சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோவில் சுற்றுவட்டார பகுதியில் 45 ஆயிரம் ஏக்கர் பாசனம் பெறுகிறது. அத்துடன், சென்னை மக்களின் தாகத்தையும் தீர்த்து வருகிறது.
மேட்டூரில் இருந்து திறக்கப்படும் தண்ணீர், கல்லணை வழியாக வந்து கொள்ளிடம் ஆற்றின் கீழணையில் தேக்கப்படும். அங்கிருந்து, வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டு, சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
சென்னைக்கு குடிநீர் அனுப்பப்படுவதால், வீராணம் ஏரிக்கு தடையின்றி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
ஆனால், இந்த ஆண்டு போதிய மழை இல்லாதது மற்றும் மேட்டூரில் தண்ணீர் இல்லாத காரணத்தால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்படவில்லை. இதனால், கடந்த ஜனவரி முதலே ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைய துவங்கியது.பிப்வரி மாத இறுதியிலேயே வீராணம்முற்றிலும் வரண்டது.
கடலுார், விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் போடப்பட்ட போர்வெல் தண்ணீர், வாலாஜா ஏரி தண்ணீர், என்.எல்.சி., சுரங்க தண்ணீர் ஆகியவை சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தற்போது சென்னையில் ஏற்பட்டுள்ள கடும், குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, வேறு வழியின்றி, மேட்டூரில் குறைவான அளவு தண்ணீர் இருந்தாலும் கூட, சென்னையின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு, வீராணத்திற்கு தண்ணீர் அனுப்ப, அரசு உத்தரவிட்டது.
அதையடுத்து, மேட்டூரில் தண்ணீர் திறக்கப்பட்டு, கீழணை வழியாக, கடந்த 25 ம் தேதி வீராணம் ஏரிக்கு வந்தடைந்தது. ஏரிக்குள், வந்துகொண்டிருக்கும் தண்ணீர், பச்சை நிறத்தில்காட்சியளிக்கிறது.
கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சாயக்கழிவுகள் கலந்திருக்கலாமோ என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.
மேலும் ஏரி தண்ணீரை மனிதர்கள், கால்நடைகள், பறவைகள் பயன்படுத்தி வருவதால், ஏரிக்கு வரும் பச்சை நிற தண்ணீரை, ஆய்வு செய்ய உரியநடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து பொதுப்பணி துறை அதிகாரிகள் கூறுகையில், ஏரி முற்றிலும் வரண்டு, குறிப்பிட்ட இடத்தில் குட்டையாக தேங்கியிருந்ததண்ணீரில் பாசி படர்ந்திருந்தது.
அந்த பாசி காரணமாக ஏரி தண்ணீர் பச்சை நிறமாக மாறியிருக்கலாம் என, தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக, ஆய்வு செய்து வருவதாக கூறினர்.
எது எப்படியோ, பொதுமக்களின் அச்சத்தை போக்க, தண்ணீரின் உண்மை தன்மையை ஆய்வு செய்து,பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.