/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
நகராட்சியை கண்டித்து விருதையில் மறியல்
/
நகராட்சியை கண்டித்து விருதையில் மறியல்
ADDED : மே 24, 2024 05:34 AM

விருத்தாசலம்,: விருத்தாசலத்தில் சாலையில் கழிவுநீர் தேங்குவதை கண்டுகொள்ளாத நகராட்சி அதிகாரிகளை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் கடைவீதியில் நகராட்சி அலுவலகம், போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், தனியார் பெரு வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளன.
கடந்த சில நாட்களாக மழை பெய்து வரும் நிலையில், கடைவீதி வழியாக செல்லும் கழிவுநீர் வடிகால் துார்ந்து கிடக்கிறது. இதனால் கழிவுநீருடன் மழைநீர் கலந்து, சாலையில் தேங்கி குளம்போல நிற்கிறது.
மாதக்கணக்கில் வடிகாலை துார்வாறாமல் விட்டதால், துர்நாற்றம் வீசுவதுடன் தொற்று நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதைக்கண்டித்து, அப்பகுதி வியாபாரிகள், பொதுமக்கள் இணைந்து, நேற்று காலை 11:00 மணியளவில், சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த நகராட்சி சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர்கள் ரவிக்குமார், முருகன், குமார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அமைச்சர் கணேசன் இவ்வழியாக தான் வீட்டிற்கு செல்கிறார்.
அதுபோல நகராட்சி அதிகாரிகள், அவரை பார்க்க வரும் மற்ற துறை அதிகாரிகளும் இவ்வழியாகவே செல்கின்றனர்.
ஆனால், கழிவுநீரை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என, சரமாரியாக குற்றம் சாட்டினர். நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையேற்று, பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால், விருத்தாசலம் - பெண்ணாடம் சாலையில் 25 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.