ADDED : ஜூலை 27, 2026 05:02 PM
புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து, 21 மாணவ, மாணவிகள் காயமின்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
புதுச்சத்திரம் அடுத்த அன்னப்பன்பேட்டையில், சர்வ சேவா தனியார் துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வேனில் 12 மாணவிகள், 9 மாணவர்களை ஏற்றுக்கொண்டு, பெரியப்பட்டிலிருந்து அன்னப்பன்பேட்டை சென்றது.
அப்போது வாண்டியாம்பள்ளம் சுடுகாடு அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், நிலைதடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த திடீர் விபத்தில் மாணவ, மாணவிகள் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர். புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவர்களை பத்திரமாக மீட்டு, பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.
தனியார் பள்ளி வேன் கவிழ்ந்த விபத்தால், இப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
