மேல்நிலைப் பள்ளிகளில் காவலர்கள் இல்லாமல் கல்வி உபகரணங்களை பாதுகாப்பதில் சிக்கல்
மேல்நிலைப் பள்ளிகளில் காவலர்கள் இல்லாமல் கல்வி உபகரணங்களை பாதுகாப்பதில் சிக்கல்
ADDED : ஆக 06, 2026 06:22 PM
விருத்தாசலம்: மாவட்ட அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இரவுநேர காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், கல்வி உபரணங்கள், தளவாடப் பொருட்களை பாதுகாப்பதில் குறைபாடு ஏற்பட்டுள்ளது.
விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை, 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இப்பள்ளி, கடந்த தி.மு.க., ஆட்சியில் நுாற்றாண்டு விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது.
மேலும், பள்ளி வளாகத்தில் உள்ள மூன்று வகுப்பறைகளில், டி.இ.ஓ., மேற்பார்வையில் கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு தேவையான விலையில்லா பாடப் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை அந்தந்த பருவங்களுக்கு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
கல்வி மாவட்டத்திற்கு பிரதானமாக விளங்கும் இப்பள்ளியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இரவு நேர காவலர் பணியிடம் காலியாக உள்ளது. இதனால் நள்ளிரவு நேரத்தில் சமூக விரோதிகள் நுழைந்து, வகுப்பறைகளில் மின்விசிறிகள் மற்றும் என்.எல்.சி., நிர்வாகம் சார்பில் நவீன வசதியுடன் கட்டித்தந்த கழிவறையில் தளவாடப் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.
இது குறித்து விருத்தாசலம் போலீசில் புகாரும் தரப்பட்டுள்ளது. மேலும், காவலர் பணியிடம் நிரப்பாமல் இருப்பதால் வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் சுவர் ஏறி குதித்து வெளியேறும் அவலமும் தொடர்கிறது. எனவே, நுாற்றாண்டு கண்ட அரசு மேல்நிலைப் பள்ளியில், இரவு நேர காவலர் பணியிடத்தை நிரப்பிட கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘விருத்தாசலத்தில் நுாற்றாண்டு கண்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவர்கள் பலர் நீதிபதி, டாக்டர், பொறியாளர், தொழிலதிபர்கள் என சாதனையாளர்களாக உருவாகியுள்ளனர். இதுபோல், அரசு பெண்கள் பள்ளியில் படித்த பலரும் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர்.
ஆனால், இந்த பள்ளிகளில் இரவுநேர காவலர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களே மாலையில் பூட்டிவிட்டு, காலையில் திறக்கும் நிலை தொடர்கிறது. இரவில் காவலர் இல்லாததால் தளவாடப் பொருட்கள், கல்வி உபகரணங்களுக்கு பாதுகாப்பில்லாத நிலை தொடர்கிறது.
மாவட்டத்தில் பெரும்பாலான அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இதேநிலை பல ஆண்டுகளாக தொடர்ந்தாலும், கல்வித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை. எனவே, கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து, இரவுநேர காவலர் பணியிடங்களை நிரப்பிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
