மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ‘கியூ.ஆர்.,’ கோடு வசதி
மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு ‘கியூ.ஆர்.,’ கோடு வசதி
ADDED : ஜூலை 17, 2026 11:34 PM
கடலுார்: மக்கள் தொகை சுய கணக்கெடுப்பினை எளிமையாக மேற்கொள்ள ‘கியூஆர்’ கோடு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கடலுார் மாவட்டத்தில் மக்கள் தொகை கணக்கெடுப்பு –2027 ன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் தாங்களே தங்களது விவரங்களை பதிவு செய்யும் சுய கணக்கெடுப்பு பணிகள் வரும் 31ம் தேதி வரை நடக்கிறது. வரும் ஆக. 1ம் தேி முதல் 30ம் தேதி வரை வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணிகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்படவுள்ளன.மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பல்வேறு விளம்பர மற்றும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.இதில், 4,748 கணக்கீட்டாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பொதுமக்கள் se.census.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தங்களுக்கு தேவையான தகவல்களை எளிதாகவும் விரைவாகவும் பதிவு செய்து சுய கணக்கெடுப்பில் பங்கேற்கலாம். இம்முறையில் பங்கேற்பதன் மூலம் கணக்கெடுப்பு செயல்முறை மேலும் எளிமையாகவும் விரைவாகவும் அமையும். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்யும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் இணையதளத்தின் மூலம் தனித்துவமான குறியீட்டு எண் வழங்கப்படும். இந்த குறியீட்டு எண்ணை, ஆக. 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை வீடுகளுக்கு வருகை தரும் கணக்கெடுப்பாளரிடம் வழங்க வேண்டும்.
மேலும், அமைச்சர்கள், எம்.பி., க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயரதிகாரிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட சமூகத்தின் முக்கிய பிரமுகர்கள் சுய கணக்கெடுப்பில் பங்கேற்க ஊக்குவிக்கப்பட உள்ளனர். அவர்களின் பங்களிப்பை வீடியோ வடிவில் பதிவு செய்து விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் செய்தித்தாள்கள், வானொலி, தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பர பதாகைகள் மற்றும் பிரசார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
பொதுமக்கள் சுய கணக்கெடுப்பில் ஆர்வமுடன் பதிவு செய்து அரசின் பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
