ADDED : மே 28, 2024 11:24 PM

விருத்தாசலம் : 'தினமலர்' செய்தி எதிரொலியாக, கவணை ஊராட்சியில் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியை பி.டி.ஓ., ஆய்வு செய்தார்.
விருத்தாசலம் அடுத்த சித்தேரிக்குப்பம் ஊராட்சி, கவணை கிராமத்தில் 1983ம் ஆண்டில் கட்டப்பட்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. அவ்வப்போது புனரமைப்பு பணிகள் மேற்கொண்ட நிலையில், துாண்களின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து வலுவிழந்து காணப்படுகிறது.
தண்ணீர் கசிவதால் முழு கொள்ளளவு நீரை தேக்கி வைக்க முடியவில்லை. கோடை காலம் துவங்கிய நிலையில், அங்குள்ள குடியிருப்புகளுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனை சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் நேற்று செய்தி வெளியானது.
இதையடுத்து, விருத்தாசலம் ஒன்றிய பி.டி.ஓ., சீனிவாசன், பொறியாளர் சண்முகம் ஆகியோர் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியை பார்வையிட்டனர். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.
மேலும், மற்றொரு பகுதியில் உள்ள மேல்நிலை தொட்டியை பார்வையிட்ட அதிகாரிகள், அதன் நிலைப்புத் தன்மையை ஆய்வு செய்தனர். ஊராட்சி செயலாளர் பாலசுப்ரமணியன், வார்டு உறுப்பினர் அலெக்சாண்டர் உடனிருந்தனர்.