ADDED : மே 13, 2026 06:40 PM
விருத்தாசலம்: குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம் அடுத்த தே.கோபுராபுரம் ஊராட்சி, இருசாளகுப்பம் ஆதிதிராவிட குடியிருப்பு பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்தது. கடந்த, 4 தினங்களாக சீராக குடிநீர் வினியோகம் செய்யாததால் பொது மக்கள், காலி குடங்களுடன் வயல்வெளிகளில் தண்ணீர் பிடித்து வரும் அவலம் நீட்டித்தது.
இது குறித்து ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பழுதடைந்த மின்மோட்டாரை சீரமைக்காததை கண்டித்து, விருத்தாசலம் – காட்டுக்கூடலுார் மற்றும் விருத்தாசலம் – ஆலடி சாலைகளில் தனித்தனியே அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாரதநேரு மற்றும் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இருப்பினும், மறியலை கைவிடாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர், பி.டி.ஓ., லட்சுமி தலைமையிலான அதிகாரிகள் நேரில் சென்று, பழுதடைந்த மோட்டாரை முற்றிலுமாக அகற்றி, புதிதாக மோட்டார் பொறுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் மாலை முதல், சீரான குடிநீர் சப்ளை கிடைக்கும் என்பதை உறுதிசெய்து, பொது மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
