ADDED : மே 01, 2026 08:21 PM

நெய்வேலி: நெய்வேலியில் முன்விரோதம் காரணமாக, வாகனங்களின் கண்ணாடியை உடைத்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
நெய்வேலி வட்டம் 30ல், அகிலன் தெருவில் தனஜெயன்பாலு, அய்யப்பன், மூர்த்தி ஆகியோரின் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று கார்கள் மற்றும் ஒரு ஆட்டோவின் கண்ணாடிகளை கடந்த 19ம் தேதி அதிகாலை மர்மநபர்களை கடப்பாறையால் உடைத்துச்சென்றனர். புகாரின் பேரில் நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்பகுதியிலுள்ள சி.சி.டி.வி.,கேமரா பதிவுகளின் அடிப்படையில், வாகனங்களின் கண்ணாடிகளை உடைத்தது நெய்வேலி வட்டம் 30, புதுஜோதி தெருவை சேர்ந்த கதிர்வேல் மகன் ஆனந்தராஜ்,20; என தெரிந்தது. இதையடுத்து ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில் ஆனந்தராஜ், நாவலர் தெருவில் வசிக்கும் அய்யப்பன் என்பவருன் கூட்டாகச் சேர்ந்த என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தில் இரும்பு திருடி வந்துள்ளார்.
பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக அய்யப்பன் தன்னுடன் சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டார். அதனால் ஆனந்தராஜ், கடந்த ஒரு ஆண்டாக தனியாக திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
கடந்த 19ம் தேதி இரும்பு திருடும் நோக்கத்துடன், சிதம்பரத்தைச் சேர்ந்த புலிப்பாண்டி மகன் ரத்தினம்,20; என்பவருடன் சென்ற போது, முன் விரோதம் காரணமாக அங்கு நிறுத்தப்பட்டிருந்த அய்யப்பன் காரைப்பார்த்ததும் ஆத்திரத்தில் கார் கண்ணாடியை கடப்பாறையால் உடைத்தார். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக அருகிலிருந்து வாகனங்களின் கண்ணாடியை உடைத்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது. ஆனந்தராஜை கைது செய்த போலீசார், ரத்தினத்தை தேடி வருகின்றனர்.
ஆனந்தராஜ் மீது கஞ்சா, அடிதடி, ஆயுதம் வைத்திருத்தல் உள்ளிட்ட, 8 வழக்குகள் உள்ளதால், நெய்வேலி தெர்மல் போலீஸ்நிலைய ரவுடி பட்டியலில் உள்ளார்.
