/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ரூ. 37 கோடியில் மேம்பாலம் 'ரெடி' சோதனை ஓட்டம் துவக்கம்
/
ரூ. 37 கோடியில் மேம்பாலம் 'ரெடி' சோதனை ஓட்டம் துவக்கம்
ரூ. 37 கோடியில் மேம்பாலம் 'ரெடி' சோதனை ஓட்டம் துவக்கம்
ரூ. 37 கோடியில் மேம்பாலம் 'ரெடி' சோதனை ஓட்டம் துவக்கம்
ADDED : ஜூன் 04, 2024 05:13 AM

விருத்தாசலம், : விருத்தாசலத்தில் 37 கோடி ரூபாயில் புதிதாக கட்டப்பட்ட மேம்பாலத்தில், சோதனை ஓட்டமாக வாகனங்கள் இயக்கம் துவங்கியது.
கடலுார் - விருத்தாசலம் - சின்னசேலம் கூட்ரோடு வரை (சி.வி.எஸ்) மாநில நெடுஞ்சாலையை, தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தி, 275 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இவ்வழியாக தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. அதைத் தொடர்ந்து, பொன்னாலகரம் கிராமத்தில் டோல்கேட் நிறுவி, வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், விருத்தாசலம் விருத்தாம்பிகை ஐ.டி.ஐ.,யில் இருந்து சேலம் புறவழிச்சாலை, உளுந்துார்பேட்டை புதிய புறவழிச்சாலை பிரியும் இடத்தில் அடிக்கடி விபத்துகள் நிகழ்ந்தன.
இதை தவிர்க்க புதுக்கூரைப்பேட்டையில் இருந்து வேளாண் அறிவியல் நிலையம் வரையில், 1 கி.மீட்டருக்கு சர்வீஸ் சாலையுடன் 37 கோடி ரூபாய் மதிப்பில் மேம்பாலம் அமைக்கும் பணி, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் துவங்கியது.
மேம்பால கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், ஓட்டு எண்ணிக்கை முடிவு காரணமாக திறப்பு விழா தள்ளிப்போனது. இந்நிலையில், புதிய மேம்பாலத்தில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நேற்று துவங்கியது. தேசிய நெடுஞ்சாலைத்துறை விழுப்புரம் கோட்டப் பொறியாளர் ரவி, விருத்தாசலம் உதவி கோட்டப் பொறியாளர் வடிவேல் குமரன், உதவி பொறியாளர் சரவணன் வாகனங்களை துவக்கி வைத்தனர்.
மேலும், மேம்பாலத்தின் இருபுறம் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை விழிப்புணர்வு பதாகைகள், பிளிங்கர் ஸ்டிக்கர்கள் பொறுத்தும் பணி நடந்து வருகிறது.