/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
/
கடலுாரில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : செப் 05, 2024 04:21 AM

கடலுார், : கடலுாரில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகையில்,கடல் வழியாக ஊடுருவ முயன்ற 4 பேரை போலீசார் பிடித்தனர்.
கடல் வழியாக மர்ம நபர்கள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு கடலோர பாதுகாப்பு படை சார்பில் சாகர் கவாச் என்னும் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. இதில் ரெட் போர்ஸ் எனப்படும் காவல் துறையில் பணிபுரியும் காவலர்கள் தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் கடல் வழியாக ஊடுருவ முயற்சி செய்வார்கள். அவர்களை புளு ஃபோர்ஸ் எனப்படும் கடலோர பாதுகாப்பு படையினர், ஊர்க்காவல் படையினர், கப்பல் படையினர் மற்றும் உள்ளூர் போலீசார் உதவியுடன் ஊருக்குள் நுழையாமல் பிடிப்பது வழக்கம்.
அதன்படி, நேற்று காலை 5:00 மணிக்கு பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி துவங்கியது.
கடலுார் கடலோர பகுதிகளில் கடலோர பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் பத்மா தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், பிரபாகரன் மற்றும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடலுார்முதுநகர் அடுத்த சித்திரைப்பேட்டை கடல் பகுதியில் 2 நாட்டிகல் மைல் தொலைவில், ஒரு படகில் வந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், தீவிரவாதிகள் போல் சாதாரண உடையில் வந்து, கடலுார் துறைமுகம், சிப்காட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் நுழைந்து சதி வேலையில் ஈடுபட வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து, அவர்களிடமிருந்த 8 போலி வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை கைப்பற்றினர்.