/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விருத்தாசலத்தில் முந்திரி பூக்களில் மருந்து தெளிப்பு
/
விருத்தாசலத்தில் முந்திரி பூக்களில் மருந்து தெளிப்பு
விருத்தாசலத்தில் முந்திரி பூக்களில் மருந்து தெளிப்பு
விருத்தாசலத்தில் முந்திரி பூக்களில் மருந்து தெளிப்பு
ADDED : மார் 06, 2025 02:06 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் பகுதியில் முந்திரி மகசூலை அதிகரிக்கும் வகையில் பூக்களில் மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் விருத்தாசலம், பண்ருட்டி பகுதிகளில் நடப்பாண்டில் 85 ஆயிரம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது. மானாவாரி பயிராக இருந்த நிலை மாறி, இறவை பயிராகவும், வி.ஆர்.ஐ., 3 போன்ற உயர் ரக விளைச்சல் தரும் ஒட்டு ரகங்களையும் பயிரிட்டு மகசூல் அதிகரித்து வணிக பயிராகவும் மாறியுள்ளது. வழக்கமாக பிப்ரவரி, மார்ச் மாதங்களில் முந்திரி மரங்கள் பூக்கத் துவங்கி, ஏப்ரல் மாதத்தில் அறுவடை துவங்கி, ஜூன் மாத துவக்கத்தில் அறுவடை முடியும்.
விருத்தாசலம், கம்மாபுரம் பகுதிகளில் விஜயமாநகரம், கச்சிராயநத்தம், எடக்குப்பம், ஆலடி, மணக்கொல்லை, கோட்டேரி, முதனை, இருளக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் முந்திரி பூக்கள் பூத்து குலுங்குகின்றன. இருப்பினும் கடுமையான பனிப்பொழிவு காரணமாக பூச்சி தாக்குதலால், மகசூல் குறையும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் அச்சமடைந்தனர். இதை தவிர்க்கும் வகையில், முந்திரி பூக்களில் மருந்து தெளிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதற்காக டிராக்டர்களில் தண்ணீர் நிரப்பிய பிளாஸ்டிக் பாரல்களில் மருந்தை கலந்து, ஸ்பிரேயர் மூலம் பூக்களில் மருந்தை தெளித்து வருகின்றனர். இதன் மூலம் ஏக்கருக்கு 4 முதல் 5 மூட்டைகள் (80 கிலோ) வரையிலும் மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.