ADDED : ஆக 21, 2024 08:24 AM

விருத்தாசலம் : முத்தனங்குப்பம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன்கடை திறக்ககோரி, கிராம மக்கள் ரேஷன் கார்டுகளை கையில் ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த வீராட்டிக்குப்பம் ஊராட்சி, முத்தனங்குப்பம் கிராமத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் ஒன்னரை கி.மீ., துாரம் சென்று, வீராட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கி வருகின்றனர்.
இதனால், முத்தனங்குப்பம் பகுதியில் பகுதிநேர ரேஷன்கடை திறக்க கோரி கிராம மக்கள் நீண்டகாலமாக போராடி வருகின்றனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இதில் ஆத்திரமடைந்த கிராம மக்கள், முத்தனங்குப்பம் கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை அமைக்க கோரி, கிராம மக்கள் நேற்று ரேஷன் கார்டுகளை கையில் ஏந்தியபடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்து வந்த ஆலடி போலீசார், அதிகாரிகளிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக கிராம மக்களிடம் உறுதியளித்தனர். அதன்பேரில், கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

