/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய மின் இணைப்பு கணக்கெடுக்கும் பணி
/
விவசாய மின் இணைப்பு கணக்கெடுக்கும் பணி
ADDED : செப் 07, 2024 05:42 AM
நெல்லிக்குப்பம்: விவசாயத்திற்கு வழங்கப்படும் மின்சாரம் வேறு பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதாக எழுந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விவசாய மின் இணைப்புகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகம் முழுதும் பல லட்சம் விவசாயிகள் விவசாய மின் இணைப்பு பெற்றுள்ளனர். இதை பயன்படுத்தி கிணறு, ஆழுதுளை கிணறு போன்றவற்றில் இருந்து தண்ணீர் எடுத்து விவசாயம் செய்கின்றனர்.
விவசாயத்தை மேம்படுத்த தமிழக அரசு விவசாயத்திற்கு, இலவச மின்சாரம் வழங்குகிறது. விவசாயத்தில் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால் பலர் நிலத்தை விற்பனை செய்கிறார்கள். அதை வாங்கியவர்கள் வீட்டுமனைப் பிரிவாக மாற்றி விற்பனை செய்கின்றனர்.
ஆனால் அவர்கள் விவசாய மின் இணைப்பை திரும்ப ஒப்படைக்காமல் பலர் வேறு தொழில்களுக்கு பயன்படுத்துவதாக புகார் எழுந்தது.
அதனைத் தொடர்ந்து, விவசாய மின் இணைப்புகளை விவசாயத்திற்கு மட்டும் தான் பயன்படுத்துகிறார்களா என கணக்கெடுக்க மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த பணியை மின்வாரிய ஊழியர்களுடன் வேளாண் துறை அதிகாரிகளும் இணைந்து செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லிக்குப்பத்தில் இந்த பணியை இரண்டு துறை அதிகாரிகளும் இணைந்து துவங்கியுள்ளனர். ஒவ்வொரு விவசாய மின் இணைப்பு உள்ள இடத்திற்கும் நேரடியாகச் சென்று விவசாயத்துக்கு தான் பயன்படுத்துகிறார்களா என ஆய்வு செய்து வருகின்றனர்.