/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விளையாட்டு பீரியடுகளை அபகரிக்கும் ஆசிரியர்கள்
/
விளையாட்டு பீரியடுகளை அபகரிக்கும் ஆசிரியர்கள்
ADDED : செப் 05, 2024 04:03 AM
திட்டக்குடி, : பள்ளிகளில் விளையாட்டு பீரியடுகளை, மற்ற பாடங்களின் ஆசிரியர்கள் அபகரிப்பதால் மாணவர்களின் உடல்நலம், மனநலம் பாதிக்கப்படும் நிலை உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் மேல்நிலை, உயர்நிலை, மெட்ரிக், நடுநிலை, தொடக்கநிலை, மழலையர் பள்ளிகள் என மொத்தம் 2,223 பள்ளிகள் உள்ளன.
ஒருசில அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு விளையாட்டிற்கு என ஒதுக்கப்பட்ட வகுப்பு நேரங்களில் மற்ற பாட ஆசிரியர்கள் எடுத்துக்கொள்ளும் நிலை உள்ளது. பாடதிட்டத்தை நிறைவு செய்ய வேண்டும் என சில ஆசிரியர்கள், இவ்வாறு விளையாட்டிற்கான நேரத்தை அபகரித்துக்கொள்கின்றனர். இதனால் விளையாட வேண்டும் என்ற மாணவர்களின் ஆர்வம் தடுக்கப்படுவதால் படிப்பில் கவனச்சிதறல் ஏற்படுகிறது.
இதுகுறித்து ஓய்வுபெற்ற உடற்கல்வி ஆசிரியர் ஒருவர் கூறுகையில், சி.பி.எஸ்.இ., தனது இணைப்புப் பெற்ற அனைத்துப்பள்ளிகளும், ஒருநாளில் குறைந்தது ஒரு பாடவேளையை விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என கூறியிருந்தது.
தமிழ்நாடு கல்வித்துறையும் ஒருவாரத்திற்கு இரண்டு மணி நேரங்களை விளையாட்டிற்கு ஒதுக்க வேண்டும் என பள்ளிகளுக்கு அறிவுறுத்தி இருந்தது.
தமிழக அமைச்சர் உதயநிதியும், கோவையில் நடந்த விழாவில், பி.டி.பீரியடுகளை விட்டுவிடுங்கள். மாணவர்களை விளையாட விடுங்கள் என அறிவுறுத்தி இருந்தார். ஆனால், சில பள்ளிகள் தான் இந்த அறிவுறுத்தலை பின்பற்றுகின்றன.
பெரும்பாலான பள்ளிகளில் இது பின்பற்றப்படுவதில்லை. மாணவர்களின் ஆரோக்கியம் விளையாட்டில் தான் உள்ளது. போதுமான நேரம் விளையாட்டிற்கு ஒதுக்காத மாணவர்களுக்கு ஆரோக்கியம் மற்றும் மனநலம் பாதிக்கப்படுகிறது.
இதனால் மாணவர்கள் இளம் வயதிலேயே பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் போதுமான அளவு மைதானங்களில் விளையாடுவதை பள்ளி நிர்வாகங்கள், பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும் என்றார்.