/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தீயணைப்பு நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
/
தீயணைப்பு நிலையம் கிராம மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஏப் 28, 2024 03:59 AM
பெண்ணாடம் : பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தில், பெண்ணாடம் குறுவட்ட தலைமையிடமாகவும், தேர்வுநிலை பேரூராட்சியாகவும் உள்ளது. இதனைச் சுற்றியுள்ள திருமலை அகரம், கோனூர், வடகரை, நந்திமங்கலம், பெ.பூவனூர், அரியராவி, சவுந்திரசோழபுரம், செம்பேரி, தாழநல்லூர், கொத்தட்டை, பெ.பொன்னேரி உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலானோர் கூரை வீடுகளில் வசிக்கின்றனர்.
கிராமங்களில் தீ விபத்து ஏற்பட்டால் 12 கிலோ மீட்டர் துாரமுள்ள திட்டக்குடி; 15 கிலோ மீட்டர் துாரம் உள்ள விருத்தாசலம், 20 கிலோ மீட்டர் துாரமுள்ள வேப்பூர் தீயணைப்பு நிலையங்களில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும். ஆனால் வாகனம் வருவதற்குள், வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைகின்றன.
இப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் கொடுத்தும் எந்த பலனும் இல்லை. இதனால் இயற்கை இடர்பாடுகளின்போது கூரைவீடுகள் எரிந்து சாம்பலாகும் நிலை தொடர்கிறது.
எனவே, பெண்ணாடத்தில் தீயணைப்பு நிலையம் அமைக்க மாவட்ட நிர்வாகம், மக்கள் பிரதிநிதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

