/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தாசில்தார்கள் டிரான்ஸ்பர் தள்ளிப்போவதன் மர்மம்?
/
தாசில்தார்கள் டிரான்ஸ்பர் தள்ளிப்போவதன் மர்மம்?
ADDED : மார் 05, 2025 04:52 AM
மாவட்டத்தில் கடலுார், சிதம்பரம், விருத்தாசலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம், வேப்பூர், காட்டுமன்னார்கோவில் ஆகிய பத்து தாலுகாக்கள் உள்ளன. வழக்கமாக ஆண்டின் முதல் மாதத்திலேயே தாசில்தார்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். அதிலிருந்து ஒராண்டிற்கு அவர்களது பணிக்காலம் நீடிக்கும். அதன்படி, இந்த ஆண்டு ஜனவரியில் நடக்க வேண்டிய தாசில்தார்கள் இடமாற்றம், பிப்ரவரி மாதத்தில் முதல்வர் ஸ்டாலின் கடலுார் மாவட்டத்திற்கு வருகையால் தள்ளிப்போனது.
முதல்வர் விழா முடிந்ததும், இடமாற்றம் இருக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், இதுபற்றி எந்த முகாந்திரமும் இதுவரை இல்லை. தற்போது பணிபுரியும் இடத்தில் சுகம் கண்ட பல தாசில்தார்கள், மாற்றத்தை விரும்பாமல், தங்களது செல்வாக்கை பயன்படுத்தி சில மாதங்களுக்கு நீட்டிப்பு பெற முயற்சியில் இறங்கியுள்ளனர்.
கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர், இந்த சந்தர்ப்பபை பயன்படுத்தி வருவாய்த்துறையில் பல்வேறு இடமாறுதல்களுக்கு, காசு பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அந்த தெம்பில் பல தாசில்தார்கள், இன்னும் 6 மாதத்திற்கு நாங்கள் தான், எங்களை அசைக்க முடியாது என, பட்டா மாற்றம், தடையில்லா சான்று, இலவச வீட்டுமனைப்பட்டா என பல்வேறு காரியங்களுக்கு, கல்லா கட்டி வருகின்றனர்.
அதேபோன்று, மாவட்டத்தின் கடைக்கோடி தாலுகா அலுவலகத்திற்கு கடந்த தேர்தலின் போது பணி மாறுதலில் வந்த அதிகாரி ஒவருக்கு, தேர்தல் முடிந்தும், மீண்டும் பழைய இடத்திற்கு செல்ல மனமில்லாமல், அதே இடத்தில் நீடிக்கிறார்.
அதிகாரிகள் மற்றும் அரசியல் செல்வாக்கு அவருக்கு இருப்பதால், இன்னும் மூன்று மாதங்களுக்கு நான்தான் என, அலுவலகத்தில் உள்ளவர்களிடம் கூறி, கல்லா கட்டி வருவதாக கூறப்படுகிறது.