/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோவில் இடம் விற்றதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
/
கோவில் இடம் விற்றதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
கோவில் இடம் விற்றதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
கோவில் இடம் விற்றதை கண்டித்து போலீஸ் நிலையம் முற்றுகை
ADDED : ஜூன் 16, 2024 06:29 AM

நெல்லிக்குப்பம்: கோவிலுக்கு வாங்கிய இடத்தை, வேறு நபருக்கு விற்றதை கண்டித்து, நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லிக்குப்பம் அடுத்த பண்ணைகுச்சிபாளையத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு அருகில் பாலூர் குயிலாப்பாளையத்தை சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்திக்கு சொந்தமாக 7 செண்ட் நிலம் இருந்தது. அந்த இடத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பு, கிராம மக்கள் 17,500 ரூபாய் கொடுத்து விலைக்கு வாங்கினர். ஆனால், அந்த இடத்தை முறைப்படி பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவில்லை. ஆனால், கோவிலுக்கு வந்த இடத்தை சுற்றி சுவர் அமைத்து, கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் வைத்திருந்துள்ளனர்.
இந்நிலையில், அதே இடத்தை பண்ணை குச்சிபாளையத்தை சேர்ந்த பலராமன் என்பவருக்கு மூன்று மாதத்துக்கு முன் கிருஷ்ணமூர்த்தி விற்பனை செய்து, பதிவு செய்து கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதை அறியாமல், அந்த இடத்தில் மாரியம்மன் கோவில் கட்டுவதற்காக கடந்த 12ம் தேதி பூமி பூஜை போட்டனர். இதையறிந்த பலராமன் தான் வாங்கிய இடத்தில் அத்துமீறி கோவில் கட்டுவதாக போலீசில் புகார் அளித்தார். இதை விசாரிக்க கோவில் நிர்வாகத்தினரை போலீசார் அழைத்திருந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் இல்லை என, கூறி, கிராம மக்களை போலீசார் சமாதனம் பேசி அனுப்பி வைத்தனர்.