/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சாலையோரம் வார சந்தை போக்குவரத்து நெரிசல்
/
சாலையோரம் வார சந்தை போக்குவரத்து நெரிசல்
ADDED : மார் 11, 2025 05:52 AM
ராமநத்தம் : ராமநத்தத்தில் வார சந்தை வளாகம் இல்லாததால், வியாபாரிகள் சாலையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
சென்னை - திருச்சி, கடலுார் - திருச்சி, விருத்தாசலம் - ஆத்துார் சாலைகளில் ராமநத்தம் உள்ளது. இங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் எளிதில் செல்ல முடிவதால் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.
மேலும், சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் சொந்த தேவைக்காக தினசரி வந்து செல்கின்றனர். இந்நிலையில், ராமநத்தம் ஊராட்சியில் வாரம்தோறும் செவ்வாய் கிழமை காய்கறிகள், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் வாரசந்தை நடக்கிறது.
வார சந்தை நடத்துவதற்கு போதிய வளாகம் இல்லாததால் ராமநத்தம் கூட்டுரோடு, கொரக்கவாடி சாலை, பழைய ராமநத்தம் சாலைகளை ஆக்கிரமித்து கடைகள் அமைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. வாரம்தோறும் செவ்வாய் கிழமை பைக்குகள் கூட செல்ல முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், பொது மக்கள், பயணிகள் கடும் சிரமமடைகின்றனர். எனவே, ராமநத்தத்தில் வாரச்சந்தை வளாகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.