/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
/
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
சிதம்பரத்தில் கல்லுாரி, பல்கலை., பெயரில் போலி சான்றிதழ் தயாரித்த இருவர் கைது
ADDED : ஜூன் 20, 2024 03:46 AM

சிதம்பரம் அருகே பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக்கழக சான்றிதழ்களை போலியாக தயாரித்து விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள மீதிகுடி - கோவிலாம்பூண்டி சாலையோரம், பள்ளி, கல்லுாரி சான்றிதழ்கள் மூட்டை மூட்டையாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சிதம்பரம் ஏ.எஸ்.பி., ரகுபதி தலைமையில் குற்றப்பிரிவு தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மூட்டைகளை கைப்பற்றினர்.
அதில் பள்ளி, கல்லுாரி மற்றும் தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக் கழகங்களின் சான்றிதழ்கள் இருந்தன. அவற்றை ஆராய்ந்ததில் அனைத்தும் போலி சான்றிதழ் என, தெரிந்தது.
விசாரணையில், சிதம்பரம் மன்மதசாமி நகரை சேர்ந்த நடராஜரத்தின தீட்சிதர் மகன் சங்கர்,37; மீதிகுடியைச் சேர்ந்த சுப்பையா மகன் நாகப்பன்,48; ஆகியோர், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பல்ககைழகங்களில் படித்து முடித்தது போல் பலருக்கு போலி சான்றிதழ் தயாரித்து விற்பனை செய்தது தெரியவந்தது.
சங்கர், நாகப்பன் இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இருவரும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம், கர்நாடக பல்கலைக்கழகம் மற்றும் பல்வேறு பள்ளி, கல்லூரி பெயரில் பட்டமளிப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், பல்வேறு அரசு மற்றும் தனியார் துறை அடையாள அட்டைகளை போலியாக அச்சடித்து தமிழ்நாடு முழுதும் பல மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள், வெளிநாடு செல்பவர்களுக்கு விற்பனை செய்து லட்சக்கணக்கில் பணம் பெற்றது தெரிய வந்தது.
இதுகுறித்து, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பதிவாளர் பிரபாகர் (பொறுப்பு) கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து, சங்கர், நாகப்பன் இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து இரண்டு கம்ப்யூட்டர்கள், பிரிண்டர், லேப்டாப், மற்றும் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி சான்றிதழ்களையும் பறிமுதல் செய்தனர்.
இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்ட, முக்கிய குற்றவாளிகள் இருவரை, போலீசார் தேடி வருகின்றனர். போலி சான்றிதழ் விற்பனையில், மேலும் பலருக்கு தொடர்பு இருக்கலாம், என்ற சந்தேகத்தில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சங்கர் என்பவர், நீண்ட ஆண்டுகளாக புதுச்சேரியில் வசித்து வருகிறார். அவர் வீட்டையும் போலீசார் சோதனைக்குள் கொண்டு வந்துள்ளனர்.
- நமது நிருபர் குழு-