/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வள்ளலார் சர்வதேச மையம் தொல்லியல் குழு ஆய்வு
/
வள்ளலார் சர்வதேச மையம் தொல்லியல் குழு ஆய்வு
ADDED : மே 07, 2024 10:59 PM

வடலுார்:கடலுார் மாவட்டம், வடலுார் சத்திய ஞான சபை பெருவெளியில், 100 கோடி ரூபாய் செலவில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் கட்டுமான பணி துவங்கியது. அதற்கு, நிலம் கொடுத்த பார்வதிபுரம் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், ஏப்., 8ல் அஸ்திவாரம் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, அஸ்திவாரத்திற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில், பழங்கால சுவர் இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், வள்ளலார் சர்வதேச மையத்தை பெருவெளியில் அமைக்க தடை விதிக்கக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. விசாரித்த நீதிபதிகள், வள்ளலார் சர்வதேச மையம் அமையும் இடத்தை தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மே 10க்குள் அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். இதனால், கட்டுமான பணியை அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
கோர்ட் உத்தரவுபடி, மாநில தொல்லியல் துறை இணை இயக்குனர் சிவானந்தன் தலைமையில், தொல்லியல் துறை, கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் மாநில அரசின் பொறியாளர்களை கொண்ட வல்லுனர் குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

