நிலக்கரி ஏற்றி செல்லும் லாரியை மறித்து கிராம மக்கள் போராட்டம்
நிலக்கரி ஏற்றி செல்லும் லாரியை மறித்து கிராம மக்கள் போராட்டம்
ADDED : ஜூலை 14, 2026 10:12 PM
மந்தாரக்குப்பம்: என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் மற்றும் நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு கிராம மக்கள் லாரியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலுார்–விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலை வடக்குவெள்ளுர் பகுதி வழியாக தினசரி, 100 க்கும் மேற்பட்ட சாம்பல் மற்றும் நிலக்கரி லாரிகள் சென்று வருகின்றன. என்.எல்.சி., இரண்டாம் சுரங்க சேமிப்பு கிடங்கில் இருந்து முதலாம் சுரங்க சேமிப்பு கிடங்கிற்கு தினசரி, லாரிகள் செல்வதால் இப்பகுதியில் சாலை முழுவதும் கரி துகள்கள் மற்றும் துாசி படர்ந்து சாலை சேறும் சகதியுமாக மாறியுள்ளதால் இருசக்கர வாகன ஒட்டிகள் சாலை விபத்துக்களில் சிக்குகின்றனர்.
மேலும் இப்பகுதி சாலையில் புழுதி மற்றும் கரி துகள்கள் பறப்பதால் பாதிப்பு ஏற்படுவதை கண்டித்து நேற்று காலை 9:00 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நிலக்கரி சேமிப்பு கிடங்கு முன்பு நிலக்கரி ஏற்றி செல்லும் லாரியை தடுத்தி நிறுத்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த நெய்வேலி டி.எஸ்.பி.,ராதாகிருஷ்ணன் என்.எல்.சி., அதிகாரிகளிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகள் இவ்வழியாக இன்று இயக்கப்படாது என தெரிவித்தார்.
அதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் 12:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் வழியாக முதல் சுரங்க சேமிப்பு கிடங்கிற்கு நேற்று மாலை 3:00 மணி முதல் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகள் கடலுார்–சேலம் தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்றன.
தொடர்ந்து இரண்டாம் சுரங்க நுழைவு வாயில் முன்பு, 50 க்கும் மேற்பட்டவர்கள் லாரியை தடுத்து நிறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் நெய்வேலி டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் மற்றும் என்.எல்.சி., அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
அதில் நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளை மாற்று வழியில் செல்ல நடவடிக்கை எடுப்பதாகவும், நிலக்கரி ஏற்றி செல்லும் லாரிகளில் தார்பாய் கொண்டு மூடி செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக வரும் 17 ம் தேதி என்.எல்.சி., இரண்டாம் சுரங்க நிர்வாக அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காணப்படும் என தெரிவித்தனர்.
அதை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு 8:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
