ADDED : ஜூலை 17, 2026 07:22 PM
விருத்தாசலம்: கடலுார் திட்ட இயக்குனர் அலுவலகத்தில், பழங்குடி மக்கள் நலச்சங்கம் சார்பில், அறிவிக்கப்பட்ட காத்திருப்பு போராட்டம், பேச்சுவார்த்தையில் வாபஸ் பெறப்பட்டது.
கம்மாபுரம் ஒன்றியம், ஊத்தாங்கால் ஊராட்சியில் மத்திய, மாநில அரசுகளால் 4 பயனாளிகளுக்கு 2023 - 24ல் வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டும் இதுவரை கட்டி முடிக்கப்படவில்லை. இதனால், ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க கோரி பழங்குடி மக்கள் நல சங்கம் சார்பில், கடலுார் மாவட்ட திட்ட இயக்குனர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கம்மாபுரம் ஒன்றிய அலுவலகத்தில், மாவட்ட துணை இயக்குனர் ஜானகி தலைமையில் சமாதானக்கூட்டம் நடந்தது.
பி.டி.ஓ., ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார். அதில், இம்மாதம், 31ம் தேதிக்குள் மூன்று பயனாளிகள் வீட்டை கட்டி ஒப்படைப்பது என அதிகாரிகள் உறுதியளித்ததை யேற்று, காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டது.
கூட்டத்தில், பழங்குடி மக்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் அசோகன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், வட்டத் தலைவர் சண்முகம், வட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர் அம்சவல்லி உட்பட பலர் பங்கேற்றனர்.
