/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
யாருக்கு ஓட்டு போடுவது பா.ம.க.,வினர் குழப்பம்
/
யாருக்கு ஓட்டு போடுவது பா.ம.க.,வினர் குழப்பம்
ADDED : மார் 28, 2024 11:15 PM
கடலுார்: கடலுார் மாவட்டத்தில் பா.ம.க., வினர் யாருக்கு ஓட்டுப் போடுவது என்ற குழப்பத்தில் உள்ளனர்.
மாவட்டத்தில் கடலுார் தொகுதியில், பா.ஜ., கூட்டணியில் உள்ள பா.ம.க., வேட்பாளராக சினிமா இயக்குனர் தங்கர்பச்சான் களம் இறக்கப்பட்டுள்ளார். சிதம்பரம் தொகுதியில் பா.ஜ., தனது கட்சி வேட்பாளராக வேலுாரைச் சேர்ந்த மாஜி மேயர் கார்த்தியாயினியை நிறுத்தியுள்ளது. இது தொகுதி பா.ஜ., நிர்வாகிகள் இடையே சுணக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டத்தில் பெரும்பான்மைாகயாக வன்னியர் சமூகத்தினர் உள்ளனர். அதனால் பா.ம.க., மாவட்டத்தில் வலுவான கட்சியாக காணப்படுகிறது. லோக்சபா தேர்தலில் பா.ம.க., தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது.
இது தொண்டர்களிடையே சுணக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சிதம்பரம் தொகுதியை பொறுத்தவரை பா.ம.க., தலைமை உத்தரவை மீறவும் முடியாமலும், பா.ஜ., வேட்பாளருக்கு தேர்தல் பணிகள் செய்ய மனம் இல்லாமலும் குழப்பத்தில் உள்ளனர்.
கடலுார் தொகுதியில் பா.ம.க., வேட்பாளர் நிறுத்தப்பட்டிருந்தாலும், அவரை எதிர்த்து தி.மு.க., கூட்டணியில் காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் நிறுத்தப்பட்டுள்ளார். இவர் பா.ம.க., தலைவர் அன்புமணியின் மைத்துனர். காங்., சார்பில், விஷ்ணுபிரசாத் கடலுார் தொகுதியில் களம் இறங்கும் நிலையில், பா.ம.க., தங்கர்பச்சனை வேட்பாளராக அறிவித்தது தெரிந்து செய்தார்களா அல்லது தெரியாமல் செய்தார்களா என தொண்டர்கள் புலம்புகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க கடலுார் மாவட்டத்தை சேர்ந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த அமைச்சர், பா.ம.க., அனைத்து நிர்வாகிகளிடம் துாதுவர்கள் மூலம் தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்கும் திரைமறைவு வேலையை கன கச்சிதமாக செயல்படுத்தி வருகிறார். இதனால் பா.ம.க.,வினர் யாருக்கு ஓட்டுப் போடுவது என குழப்பத்தில் உள்ளனர்.

