/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதியில் கரை சேருமா பா.ம.க.,
/
கடலுார் தொகுதியில் கரை சேருமா பா.ம.க.,
ADDED : ஏப் 03, 2024 03:16 AM
விருத்தாசலம் : லோக்சபா தேர்தல் வரும் 19ம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடக்கிறது. இந்நிலையில், கடலுார் தொகுதியில், காங்., கட்சி சார்பில் ஆரணி சிட்டிங் எம்.பி., விஷ்ணு பிரசாத், பா.ம.க., சார்பில் திரைப்பட இயக்குனர் தங்கர்பாச்சான், தே.மு.தி.க., சார்பில், அக்கட்சியின் மாவட்ட செயலர் சிவக்கொழுந்து போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில், கடலுார் லோக்சபா தொகுதியில் கடந்த 1951ம் ஆண்டு முதல் லோக்சபா தேர்தல் நடந்தது.
அப்போது தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியில் போட்டியிட்ட கோவிந்தசாமி கச்சிராயர் வெற்றி பெற்றார்.
1951ம் ஆண்டில் இருந்து இதுவரை கடலுார் லோக்சபா தொகுதியில் 17 முறை தேர்தல் நடந்து முடிந்துள்ளது. அதில், காங்., கட்சி 7; தி.மு.க. 5; அ.தி.மு.க., 2 என பிரதான கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
ஆனால், வன்னியர்கள் அதிகம் வாழும் பகுதியான கடலுாரில் இதுவரை பா.ம.க., வெற்றிபெறவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு தேர்தலில் பா.ம.க., சார்பில் போட்டியிட்ட டாக்டர் கோவிந்தசாமி 36.25 சதவீத ஓட்டுகள் பெற்று இரண்டாமிடம் பிடித்தார்.
இவரை எதிரத்து போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர் ரமேஷ் 50.05 சதவீத ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சித்ரா 3.33 சதவீத வாக்குகளை பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
இதனால், இந்த முறை பா.ம.க., - தே.மு.தி.க., கட்சிகள் வெற்றி பெற்று தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா அல்லது காங்., தனது 8வது வெற்றியை உறுதி செய்யுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் ஆலோசகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

