ADDED : ஜூன் 25, 2026 05:50 PM
விருதையில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை தேவை
25.06.2026: விருத்தாசலம் மணிமுக்தாற்றை பாதுகாக்கும் வகையில் 25 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை துவங்கிட, த.வெ.க., அரசிடம் பிரேமலதா அழுத்தம் தர வேண்டும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
விருத்தாசலம் நகராட்சிக்கு உட்பட்ட 33 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வசிக்கின்றனர். தமிழகத்தில் இங்கு மட்டுமே செராமிக் தொழிற்பேட்டையும், அரசு பீங்கான் தொழில்நுட்பக் கல்லுாரியும் உள்ளன. இங்குள்ள லட்சக்கணக்கான குடியிருப்புகள் மற்றும் அரசு, தனியார் மருத்துவமனைகள், ஓட்டல்கள், பெருவணிக நிறுவனங்களில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் அனைத்தும் ராட்சத வடிகால் வாயிலாக நகர பகுதியில் 14 இடங்களில் இருந்து மணிமுக்தாற்றில் விடப்படுவதால், சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது.
கடந்த காலங்களில் விருத்தகிரீஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மணிமுத்தாற்றில் நீராடிவிட்டு சென்றதாக வரலாறு உள்ளன. காசியைவிட வீசம் பெருசு விருத்தகாசி என்ற ஆன்மிக பெயரும் உள்ளது. காசிக்கு சென்று கங்கையில் நீராடி பாவங்களை போக்குவதை விட, மணிமுக்தாற்றில் நீராடி, விருத்தகிரீஸ்வரரை வேண்டினால் பூர்வஜென்ம பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய புனிதநீரான மணிமுக்தாறு கழிவுநீர், குப்பைகள் குவிந்து, முட்புதர்கள் மண்டி மினிகூவம்போல காட்சியளிக்கிறது.
வெள்ள காலங்களில் மட்டுமே மணிமுக்தாற்றில் நீர்வரத்து இருக்கும் நிலையில், கோடைக் காலங்களில் வறண்டு நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக சரிந்தது. இதனால் நகரில் ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் செயலிழந்து குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படுகிறது. இதனால், 2 முதல் 4 லட்சம் ரூபாய் செலவழித்து, 200 முதல் 330 அடிக்கு கீழே போர்வெல் போடும் அவலம் ஏற்பட்டுள்ளது.
இதனை தவிர்க்கும் வகையில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்ட முயற்சி செய்யப்பட்டது. அப்போது ஆய்வு செய்த சென்னை நபார்டு குழுவினர், கழிவுநீர் வரத்து இருக்கும் பகுதியில் தடுப்பணை கட்ட முடியாது என கைவிரித்து விட்டனர். இதனால் தடுப்பணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி கிடைக்கவில்லை.
விருத்தாசலம் மக்களின் நலன் கருதி என்.எல்.சி., இந்தியா நிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ் கழிவுநீரை சுத்திகரித்து, மணிமுக்தாற்றில் திருப்பி விடும் முயற்சியை துவங்கியது. ஆனால், இத்திட்டம் மூலம் கழிவுநீரை முழுமையாக சுத்திகரிக்க முடியாது என்பதை அப்போதைய கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் பார்வையிட்டு தெரிந்து கொண்டார்.
இதனால், ஆற்றின் கரையில் போடப்பட்ட சுத்திகரிப்பு தொட்டிகள் பயனில்லாமல் போனது. வெள்ள காலத்தில் பாய்ந்தோடும் மழைநீரை சேமித்தால் மட்டுமே நிலத்தடி நீரை சேமிக்க முடியும் என்ற இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதனை பொதுப்பணித்துறையின் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் குழு ஆய்வு செய்து, நகராட்சி நிர்வாகத்திடம் உறுதிப்படுத்தியது.
மணிமுக்தாற்றில் தடுப்பணை கட்டாமல் நிலத்தடிநீரை சேமிக்க முடியாது என்பதால், புதிய திட்டம் ஒன்றை உருவாக்கிட நகராட்சி முன்வந்தது. அதன்படி, 33 வார்டுகளில் இருந்து மணிமுக்தாற்றில் வெளியேற்றப்படும் கழிவுநீரை ராட்சத குழாய்கள் மூலமாக ஒரே இடத்தில் சேகரித்து, அதனை சுத்திகரிப்பு செய்து, மணிமுத்தாற்றில் விட முடிவு செய்யப்பட்டது.
இதற்காக, கடந்த ஓராண்டுக்கு முன் நகராட்சி சேர்மன் சங்கவி முருகதாஸ் தலைமையிலான நிர்வாகம் ஆய்வு நடத்தி, கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியின் பின்புறம் மணிமுத்தாற்றின் கரையில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க இடமும் தேர்வு செய்தது. இதற்காக, அப்போதைய அமைச்சர் கணேசன் வாயிலாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் நேருவையும் சந்தித்து முறையிடப்பட்டது.
அதன்படி, மூல கழிவுநீரை ராட்சத குழாய்கள் வழியாக கொண்டு வந்து, 8 மெகா பிரிவுகள் மூலம் சுத்திகரித்து, தெளிந்தநீராக மாற்றி, மணிமுக்தாற்றில் விட 24 கோடி ரூபாயில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது.
இத்திட்டம் நிறைவேறினால், பல ஆண்டுகளாக ஆற்றில் விடப்பட்டு வரும் கழிவுநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைப்பதுடன், தடுப்பணையை கட்டி, குடிநீர் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். இதற்கு மாவட்ட நிர்வாகமும் ஒப்புதல் வழங்கி, அதற்குரிய கோப்புகளுடன் மாநில நிர்வாகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், கடந்த ஆட்சியில் நிதி மற்றும் நிர்வாக பிரச்னையால் செயல்படுத்தப்பட முடியாமல் போனது. தற்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள த.வெ.க.,தலைமையிலான தமிழக அரசு, விருத்தாசலம் மக்களின் நீண்டகால கோரிக்கையான மணிமுக்தாற்றை துாய்மையாக பராமரித்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகமும், விருத்தாசலம் தொகுதி எம்.எல்.ஏ.,வான பிரேமலதா மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
