/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கருவேப்பிலங்குறிச்சியில் நிழற்குடை கட்டப்படுமா
/
கருவேப்பிலங்குறிச்சியில் நிழற்குடை கட்டப்படுமா
ADDED : ஜூன் 06, 2024 02:55 AM
பெண்ணாடம்: கருவேப்பிலங்குறிச்சி கூட்டுரோட்டில் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் சாலை மார்க்கத்தில் நிழற்குடை கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விருத்தாசலம் - திட்டக்குடி, விருத்தாசலம் -ஜெயங்கொண்டம் சாலை மார்க்கத்தில் கருவேப்பிலங்குறிச்சி முக்கிய பகுதியாக உள்ளது.
கருவேப்பிலங்குறிச்சி வழியாக ஜெயங்கொண்டம், கும்பகோணம், தஞ்சாவூர், பெண்ணாடம், திட்டக்குடி, திருச்சி, கடலுார் உட்பட பல ஊர்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன.
மேலும், இங்குள்ள பஸ் நிறுத்தத்தை அருகிலுள்ள பேரளையூர், சத்தியவாடி, டி.வி.புத்தூர், நேமம், ஆலந்துறைப்பட்டு உட்பட 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பஸ் நிறுத்தத்தில் நிழற்குடை வசதி இல்லாததால் மழை, வெயில் காலங்களில் திறந்தவெளியிலும், அருகிலுள்ள கடைகளிலும் ஒதுங்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதைத்தொடர்ந்து, அப்போதைய விருத்தாசலம் தொகுதி தே.மு.தி.க., எம்.எல்.ஏ., முத்துக்குமாரின் தொகுதி மேம்பாட்டு நிதி 10 லட்சத்தில் விருத்தாசலம் மார்க்கத்திலும்; பெண்ணாடம் மார்க்கத்தில் அப்போதைய எம்.பி., அருண்மொழிதேவன் தொகுதி மேம்பாட்டு நிதி 5 லட்சத்தில் நிழற்குடை கட்டவும் இடம் தேர்வு செய்யப்பட்டது.
ஆனால், எம்.பி., நிதியில் பெண்ணாடம் மார்க்கத்தில் மட்டும் பயணியர் நிழற்குடை கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மற்ற பகுதியில் நிழற்குடை இல்லாததால் விருத்தாசலம், ஜெயங்கொண்டம் செல்லும் பயணிகள் மழை, வெயில் காலங்களில் நிழற்குடை வசதியின்றி திறந்தவெளியில் நின்று பஸ் ஏறுவது தொடர்கிறது.
எனவே, பயணிகள் நலன்கருதி, கருவேப்பிலங்குறிச்சியில் விருத்தாசலம்- மற்றும் ஜெயங்கொண்டம் மார்க்கத்தில் நிழற்குடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.