ADDED : செப் 10, 2024 06:33 AM

கடலுார் : சேடப்பாளையத்தில் கிராம மக்கள் குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேடப்பாளையம் அடுத்த ஆண்டிக்குப்பம் காமராஜ் நகரில், சாலை அமைக்கும் பணியின்போது, குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆண்டிக்குப்பம கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் சில நாட்களாக பாதிப்படைந்து வருகின்றனர்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காதால், கிராம மக்கள் நேற்று காலை சேடப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகில் காலி குடங்களுடன் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் கடலுார்-விருத்தாசலம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடலுார் முதுநகர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, குடிநீர் குழாய் உடன் சீரமைக்கப்பட்டு, குடிநீர் விநியோகம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததால், 10:30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தால் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.