/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 'டெட்' தேர்வு எழுதுவோர்... 19,908 பேர்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
/
மாவட்டத்தில் 'டெட்' தேர்வு எழுதுவோர்... 19,908 பேர்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மாவட்டத்தில் 'டெட்' தேர்வு எழுதுவோர்... 19,908 பேர்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
மாவட்டத்தில் 'டெட்' தேர்வு எழுதுவோர்... 19,908 பேர்; பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
ADDED : நவ 12, 2025 06:24 AM

கடலுார்: ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வை கடலுார் மாவட்டத்தில் இருந்து 19,908 தேர்வர்கள் எழுத உள்ளனர். இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள், மாவட்ட நிர்வாகம் சார்பில், முடுக்கி விடப்பட்டுள்ளன. ஆசிரியர் தேர்வு வாரியத்தினால் 2025ம் ஆண்டிற்கு ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள்-1 தேர்வு, வரும், 15ம் தேதி மற்றும் தாள்-2 தேர்வு, 16ம் தேதி அன்று எழுத்துத்தேர்வு நடக்கிறது.
ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தாள்-1 தேர்வை, 12 மையங்களில் 4,191 தேர்வர்களும், தாள்-2 தேர்வை, 53 மையங்களில் 15,717 தேர்வர்களும் என மொத்தம் கடலுார் மாவட்டத்தில் 65 தேர்வு மையங்களில் 19,908 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வர்கள் தேர்வாணையத்தின் இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு மைய அனுமதி சீட்டுடன் தேர்வு நடைபெறும் இடத்திற்கு குறித்த நேரத்திற்குள் வருகை புரிய வேண்டும்.
அனைத்து தேர்வு மையங்களிலும் கண்காணிப்பு கேமரா மூலம் தேர்வுகளை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேர்வர்களின் நலன் கருதி மருத்துவ உதவிகள் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் தேர்வு மையங்களில் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் வினாத்தாள்கள் செல்வதை உறுதி செய்தல், விடைத்தாள்களை காப்பு மையங்களுக்கு கொண்டு செல்வதில் எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காத வகையில் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் பணிகள் மேற்கொள்ள விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக கடலுார் அலுவலக கூட்டரங்கில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதித் தேர்விற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
தேர்வு நடைபெறும் நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போக்குவரத்துத்துறை சார்பில், மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு உரிய நேரத்தில் சென்றிட தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திடவும், தேர்வு மையங்களில் சுகாதாரம் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வருவாய்துறை, காவல்துறை, சுகாரத்துறை, தீயணைப்புத்துறை, மின்சாரத்துறை, அஞ்சல் துறை உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

