/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தண்ணீரின்றி 20 ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பாதிப்பு! காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் கவலை
/
தண்ணீரின்றி 20 ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பாதிப்பு! காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் கவலை
தண்ணீரின்றி 20 ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பாதிப்பு! காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் கவலை
தண்ணீரின்றி 20 ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு பாதிப்பு! காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் கவலை
ADDED : செப் 10, 2024 06:42 AM

காவிரி கடைமடை பகுதியான சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் சுமார் 1 லட்சம் ஏக்கர் விளை நிலங்கள், வீராணம் மற்றும் கீழணையில் இருந்து வாய்க்கால் மூலம் திறக்கப்படும் தண்ணீர் மூலம் பாசனம் பெறுகிறது. சமீப ஆண்டுகளாக பருவம் தவறிய மழை மற்றும் காவிரி நீர் சரியான நேரத்தில் கிடைக்காததால், முப்போக சாகுபடி ஒரு போகமாக மாறியுள்ளது.
மேலும், விவசாய வேலைக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக, பெரும்பாலான விவசாயிகள் நேரடி நெல் விதைப்பில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், மேட்டூரில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதால், அதை நம்பி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவிலில் பெரும்பாலான பகுதிகளில் சம்பா பருவத்திற்கு, கடந்த மாதம் 20 ம் தேதியில் இருந்து நேரடி நெல் விதைப்பில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால், குறித்த காலத்தில் பாசனத்திற்கு தண்ணீர் கிடைக்காததால், ஒரு சில பகுதிகளில் விதைப்பு நெற்பயிர் வயல்கள் கருகி பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கீழணையில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் பகுதிகளான எடையார் , கூத்தூர், பிள்ளையார்தாங்கள், வவ்வாத்தோப்பு, நடுத்திட்டு, செங்கழுநீர்பள்ளம், திருநாரையூர்,சிறகிழந்தநல்லுார், நெய்வாசல் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 20ஆயிரம் ஏக்கர் நேரடி நெல் விதைப்பு செய்த பயிர்கள் கருதியுள்ளது. இதனால், தண்ணீர் கிடைத்தாலும் மீண்டும் புதியதாக விதைப்பு செய்ய வேண்டிய நிலையில், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
இதனிடையே, கீழணையில் இருந்து, கடந்த 7ம் தேதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடிவு செய்தனர். ஆனால், 13 ம் தேதிக்கு திறக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். எனவே, இனியும் காலம் தாழ்த்தாமல், விரைந்து தண்ணீர் திறந்தால், எஞ்சிய பயிர்களையாவது காப்பாற்ற முடியும் என, விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும், வடக்கு ராஜன் வாய்காலில் மூன்று இடங்களில் ஷட்டர் அமைக்கும் பணிகள் நடக்கிறது. இதனால், அதன் வழியாக பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
எனவே, பணிகளை விரைந்து முடிந்து, பாசனத்திற்கு தடையின்றி தண்ணீர் திறக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.