ADDED : மார் 18, 2026 03:41 AM
சிதம்பரம்: சிதம்பரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச்செல்லப்பட்ட 26 சிலிண்டர்களை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
சிதம்பரம் சட்டசபை தொகுதியில், பறக்கும் படை மற்றும் கண்காணிப்பு குழுவினர் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று காலை அரசியல் கட்சியினர் மற்றும் வர்த்தக சங்கத்தினருடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில், 'வாக்காளர்களுக்கு காஸ் சிலிண்டர் தந்து கவர அரசியல் கட்சியினர் முயற்சித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது, அப்படி இருந்தால் காஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்' என சிதம்பரம் சப் கலெக்டர் கிஷன்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நேற்று இரவு தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரி பிருந்தா தலைமையிலான குழுவினர் சிதம்பரம்-கொத்தட்டை டோல்கேட் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிதம்பரத்திலிருந்து கடலுார் நோக்கிச்சென்ற மினிலாரியை சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணங்களின்றி 26 சிலிண்டர்கள் எடுத்துச்செல்லப்பட்டது தெரிந்தது. அதை பறிமுதல் செய்த அதிகாரிகள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஹரிதாஸிடம் ஒப்படைத்தனர்.
காஸ் சிலிண்டர்களை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்த சம்பவம் சிதம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
