/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கன மழையால் கடலில் கலந்தது 30 டி.எம்.சி., தண்ணீர் வீண்! வெள்ளநீரை சேமிக்க தொலைநோக்கு திட்டம் தேவை
/
கன மழையால் கடலில் கலந்தது 30 டி.எம்.சி., தண்ணீர் வீண்! வெள்ளநீரை சேமிக்க தொலைநோக்கு திட்டம் தேவை
கன மழையால் கடலில் கலந்தது 30 டி.எம்.சி., தண்ணீர் வீண்! வெள்ளநீரை சேமிக்க தொலைநோக்கு திட்டம் தேவை
கன மழையால் கடலில் கலந்தது 30 டி.எம்.சி., தண்ணீர் வீண்! வெள்ளநீரை சேமிக்க தொலைநோக்கு திட்டம் தேவை
ADDED : டிச 07, 2024 07:33 AM

கடலுார் : கடலுார் வழியாக, தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்த வெள்ள நீர், 5 நாட்களாக ஓடிச்சென்று வங்கக் கடலில் 30டி.எம்.சி., க்கு மேல் கலந்து வீணாகியது.
கர்நாடகா மாநிலத்தில் இருந்து காவிரி, தென்பெண்ணை ஆகிய இரு ஆறுகள் உருவாகி தமிழகத்தில் பாய்கிறது. இதில், தென்பெண்ணையாறு சிக்கபலபுரா மாவட்டத்தில் உள்ள நந்தி மலையில் உருவாகி தமிழகத்திற்குள் வருகிறது. இந்த ஆற்றில் ஆண்டு முழுவதும் தண்ணீர் வருவதில்லை. வடகிழக்கு பருவ காற்றின் மூலம் ஏற்படும் மழையால் மட்டும் வெள்ளம் ஏற்படுகிறது.
கர்நாடகா மாநிலத்தில் பெய்யும் மழைநீர் தென்பெண்ணையாற்றின் மூலம் தமிழகத்திற்குள் நுழைகிறது. கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணா அணைகட்டுகளில் தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது. மேலும், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனுார் அணைக்கட்டில் இந்த தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
சாத்தனுார் அணைக்கட்டின் கொள்ளளவு 7.3 டி.எம்.சி., யாகும். கடந்த 30ம் தேதி பெஞ்சல் புயல் புதுச்சேரி அருகே கடந்தபோது எதிர்பாராத விதமாக கனமழை கொட்டி தீர்த்தது. வரலாறு காணாத இந்த மழையால் புதுச்சேரியில் 50 செ.மீ., கடலுார் 25 செ.மீ., மைலம் 51, திண்டிவனம் 50 செ.மீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதனால், கடலுார், விழுப்பரம், புதுச்சேரி வெள்ளக்காடாகி, கடும் பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மாவட்டங்களும் பெஞ்சல் புயல் காரணமாக பெய்த கன மழையால் தத்தளித்தன.
பெஞ்சல் புயல் கரையை கடந்த பின்னர் நிலப்பகுதியில் நிலை கொண்டிருந்ததால் அதிகளவு மழையை கொடுத்தது. இதனால் 30ம் தேதி இரவே சாத்தனுார் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது.
அதனால் பாதுகாப்பு கருதி, அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டு, துவக்கத்தில் 6 ஆயிரம் கனஅடி திறந்துவிடப்பட்டது. தண்ணீர் வரத்து அதிகரித்ததால், டிச., 1ம் தேதி ஒரே நேரத்தில் 1.70 லட்சம் கன அடி திறக்கப்பட்டடது. அது, படிப்படியாக 2.20 லட்சம் கன அடியானது.
அதிக அளவில் திறக்கப்பட்ட தண்ணீர், கடலுார் வழியாக ஒடும் தென்பெண்ணையாற்றில் கரைபுரண்டது. மேலும், வழியில் உள்ள பகுதிகளில் பெய்த மழைநீரும் தென்பெண்ணையாற்றில் சேர்ந்து கட்டுக்கடங்காத வெள்ளம் ஏற்பட்டது.
தென்பெண்ணையில் அளவு கடந்த தண்ணீர் வந்ததால், பெண்ணையாற்றின் கரைகள் உடைந்து, மாவட்டத்தில் தென்பெண்ணையை யொட்டி கிராமங்கள், நகர் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.
மழை நின்றதால் தண்ணீரில் அளவும் குறைந்தது. கடலுார் வழியாக பெண்ணையாற்றில் கடந்த நவ., 30ம் தேதி முதல் 5ம் தேதி வரை ஓடிச்சென்று கடலில் கலந்த தண்ணீரின் அளவு 27 டி.எம்.சி., என பொதுப்பணித்துறை கணக்கிட்டுள்ளது.
அத்துடன் கடலுாரை ஒட்டிய பாகூர் மற்றும் முள்ளோடை, வழியாக சின்னாற்றில் வெள்ளம் ஏற்பட்டது. இந்த தண்ணீர் மற்றும் கடலுார் சுற்றியுள்ள பகுதியில் பெய்த மழை நீர் என, மொத்தம் 30 டி.எம்.சி., அளவில் தண்ணீர் வீணாக கடலுார் வங்கக்கடலில் கலந்து வீணாகியது.
இந்த தண்ணீரை தேக்கி வைக்க செக்டேம் அமைக்க அரசு எடுதுள்ள முயற்சி ஓரளவுக்குத்தான் கைகொடுத்தது. எனவே, இனிவரும் காலங்களில் வீணாகும் தண்ணீரை சேமிக்க அரசு தொலைநோக்கு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.