ADDED : மார் 05, 2026 03:25 AM
கிள்ளை: போலீசாரை தாக்கி, ஜீப் கண்ணாடியை உடைத்த, 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
சிதம்பரம் அருகே கிள்ளை முழுக்குத்துறையில் நேற்று முன்தினம் மாசி மகத்திருவிழா நடந்தது. ஏராளமான பொதுமக்கள் கடலில் நீராடினர். மாலை 6:00 மணியளவில் எம்.ஜி.ஆர்., திட்டு கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த இளைஞர்களிடம் நேரமாகிவிட்டது கரையேறும்படி கிள்ளை போலீசார் கூறினர். இதனால் ஆத்திரமடைந்த கிள்ளை அடுத்த தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த மகிழ்பாலன் மற்றும் 5 பேர், கிள்ளை போலீஸ்காரர் தனஜெயத்தை, 36; தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். மேலும், அங்கு நின்றிருந்த ஜீப் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.
இதுகுறித்து, தனஜெயம் கொடுத்த புகாரின்பேரில், கிள்ளை போலீசார் வழக்குப்பதிந்து, தில்லைவிடங்கன் கிராமத்தை சேர்ந்த மகிழ்பாலன், 22; ஆட்டோ என்கிற பிரபுதாஸ், 25; அன்புதாஸ், 22; தாமரைச்செல்வன், 25; ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். சுந்தரை தேடி வருகின்றனர்.
