/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பஸ்சில் எடுத்து வந்த 52 சவரன் கொள்ளை
/
பஸ்சில் எடுத்து வந்த 52 சவரன் கொள்ளை
ADDED : நவ 29, 2024 02:32 AM

விருத்தாசலம்:கடலுார் மாவட்டம், விருத்தாசலம், ராஜவேல் வீதி காய்கறி மார்க்கெட் எதிரே செந்தில் ஜுவல்லரி நகைக்கடை உள்ளது. இங்கு விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சியை சேர்ந்த ஜான், 45, பணிபுரிகிறார்.
இவர், நேற்று மதியம் நகை கடையில் இருந்து, 52 சவரன் நகைகளை எடுத்துக் கொண்டு, பெண்ணாடத்தில் இயங்கும் தனியார் ஹால் மார்க் சீல் போடும் மையத்திற்கு பஸ்சில் சென்றார்.
மாலை, 4:00 மணிக்கு, ஹால்மார்க் சீல் போட்ட நகைகளுடன், திருச்சி - புதுச்சேரி அரசு பஸ்சில் வந்தார். கருவேப்பிலங்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் பஸ் நின்றபோது, ஜான் அருகில் அமர்ந்திருந்த மர்ம நபர், மின்னல் வேகத்தில் அவரிடம் இருந்த நகைப்பையை பறித்துக் கொண்டு, முன்புற படி வழியாக இறங்கி ஓடினார். அவருடன், பின்புற படியில் இருந்து மற்றொரு நபரும் ஓடினார்.
நகையை பறிகொடுத்த ஜான் கூச்சல் எழுப்பியபடி, பஸ்சிலிருந்து இறங்கி பார்த்தபோது, ஒரு பைக்கில் தயாராக இருந்த மற்றொரு நபருடன் இருவரும் ஏறி தப்பிச் சென்றனர்.
ஜுவல்லரி உரிமையாளர் தியாகராஜன், கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். டி.எஸ்.பி., மோகன், இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் அங்குள்ள கேமரா பதிவை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.