கல்வி சேவையில் 73 ஆண்டுகளாக சிறந்து விளங்கும் பள்ளி
கல்வி சேவையில் 73 ஆண்டுகளாக சிறந்து விளங்கும் பள்ளி
ADDED : பிப் 08, 2026 03:40 AM

க டலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடியில் கடந்த,1953ம் ஆண்டு ச.கு.வேலாயுதம் என்பவரால், 15 மாணவர்களுடன் ச.கு.வேலாயுதம் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட்டது.
70 ஆண்டுகளை கடந்து இயங்கி வரும் பாரம்பரியம் மிக்க பள்ளி. கடலுார் மாவட்டத்திலேயே இரண்டாவது பெரிய பள்ளியாகவும், தற்போது ஏ கிரேட் பள்ளி எனவும் பெயர் பெற்றுள்ளது. அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 1951 மாணவர்கள் இப்பள்ளியில் கல்வி பயில்கின்றனர்.
மாணவர்களுக்கு அரசு வழங்கும் அனைத்து சலுகைகளும் பெற்று தரப்படுகிறது. கல்வி உதவித்தொகை உடனுக்குடன் பெற்றுத்தரப்படுகிறது.
மாணவர்களின் கல்வி இணை செயல்பாடுகளில் ஈடுபடுத்தி திறமைகளை வெளிக்கொணர தமிழ் மன்றம், ஆங்கில மன்றம், கணித மன்றம், என்.சி.சி., என்.எஸ்.எஸ்., ஜே.ஆர்.சி., ஸ்கவுட், என்.ஜி.சி., போன்ற அமைப்புகள் சிறப்பாக செயல்படுகிறது.
கலைக்கழகம் என்ற அமைப்பு இப்பள்ளியில் தான் முதன்முதலில் துவங்கப்பட்டது. இப்பள்ளியில் 54 வகுப்பறைகள், 2 அறிவியல் ஆய்வகங்கள், ஒரு கணினி ஆய்வகம் மற்றும் ஒரு புரோஜெக்டர் உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகள் உள்ளன.
மேலும் இப்பள்ளியில் பணியாற்றிய, 6 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருது பெற்றுள்ளனர். பள்ளி முன்னாள் மாணவர்கள் உலகெங்கிலும் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளிக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் பேராசிரியர் அன்பழகன் போன்றோர் வருகை புரிந்துள்ளனர்.
இப்பள்ளியை செயலர் அருண், வழி நடத்தி வருகிறார். பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தகுமார் மாணவர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.
இப்பள்ளியில் படித்த பழனியாண்டி ஐ.ஏ.எஸ்., துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில், கலெக்டராக பணியாற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., சொரத்துார் ராஜேந்திரன், இப்பள்ளி மாணவர். இங்கு படித்த மாணவர்கள், டாக்டர்கள், வழக்கறிஞர்களாக உள்ளனர்.
30க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இப்பள்ளியிலேயே பயின்று இதே பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகின்றனர். உளவியல் சிக்கல்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ள திறன்மிக்க உளவியல் ஆலோசகர்களால் பயிற்சி அளிக்கப்படுகிறது.
தஞ்சாவூரில் நடந்த மாநில அளவிலான கலைக்கழக போட்டியில் இப்பள்ளி மாணவர்கள் கிராமிய நடனப்பிரிவில் இரண்டாமிடம் பிடித்தமைக்காக, முன்னாள் மத்திய இணையமைச்சர் பழனிமாணிக்கம் பரிசு வழங்கி பாராட்டினார். விளையாட்டுத்துறையில், கடலுார் மாவட்ட அளவில் கூடைப்பந்தாட்டத்தில் இப்பள்ளி அணி சிறந்து விளங்குகிறது. மாநில அளவில் கூடைப்பந்தாட்டத்தில் பரிசுகளை வென்றுள்ளது.
