தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பிரதான சாலைகளில் விபத்து அபாயம்
தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்கள் பிரதான சாலைகளில் விபத்து அபாயம்
UPDATED : நவ 29, 2026 10:00 PM
ADDED : நவ 29, 2026 10:00 PM

விருத்தாசலம்: விருத்தாசலம் பிரதான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் பாதசாரிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விருத்தாசலம், உளுந்துார்பேட்டை சாலையில் உள்ள பஸ் நிலையத்திற்கு தினசரி நுாற்றுக்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், விழுப்புரம், சென்னை, வேலுார், கள்ளக்குறிச்சி மார்க்கமாக லாரி, வேன், கார் போன்ற வாகனங்களும் செல்கின்றன.
இந்நிலையில், ஜவுளி, ஜூவல்லரி போன்ற பெருவணிக நிறுவனங்களுக்கு வருவோரின் கார், பைக் போன்ற வாகனங்கள் ஆங்காங்கே சாலையோரம் தாறுமாறாக நிறுத்தப்படுகிறது. இதனால், பிற வாகனங்கள் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.
அப்போது, இடதுபுறத்தை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால், பாதசாரிகள் மற்றும் எதிரே வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் அதிகரித்துள்ளது. மேலும், பஸ் நிலையம் அருகிலுள்ள தனியார் மதுபான கூடத்திற்கு வருவோரின் வாகனங்களும் தாறுமாறாக நிறுத்தப்படுவதால் பெண்கள் மிகுந்த சிரமமடைகின்றனர்.
எனவே, விருத்தாசலத்தில் பிரதான சாலைகளில் தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களை பறிமுதல் செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
