ADDED : செப் 19, 2026 09:33 PM
விருத்தாசலம்: வேன் மோதியதில் படுகாயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
மங்கலம்பேட்டையை சேர்ந்தவர் கொளஞ்சி,50; இவரது மனைவி வளர்மதி,49; இருவரும் கடந்த 17 ம் தேதி பெண்ணாடத்தில் நடந்த உறவினர் திருமணத்திற்கு சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பினர்.
விருத்தாசலம் - உளுந்துார்பேட்டை சாலை புதுக்குப்பம் அருகே சென்றபோது, அதேபகுதியை சேர்ந்த செபஸ்டியன் கண்ணன் ஓட்டி வந்த பைக், கொளஞ்சி பைக் மீது மோதியது.
இதில், நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, எதிரே வந்த டி.என்.91 ஏ.யு., 8579 பதிவெண் கொண்ட வேன், கொளஞ்சி பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த கொளஞ்சி, மனைவி வளர்மதி, செபஸ்டியன் கண்ணன் அவரது மனைவி மேரி உஷாராணி ஆகிய நால்வரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கொளஞ்சி நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
