தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/புரோக்கர்கள் ஆதிக்கத்தால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்ததாக குற்றச்சாட்டு:நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆதங்கம்

புரோக்கர்கள் ஆதிக்கத்தால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்ததாக குற்றச்சாட்டு:நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆதங்கம்

புரோக்கர்கள் ஆதிக்கத்தால் நெல் மூட்டைகள் தேக்கம் அடைந்ததாக குற்றச்சாட்டு:நேரடி கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் ஆதங்கம்


UPDATED : செப் 06, 2026 08:24 PM

ADDED : செப் 06, 2026 07:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 06, 2026 08:24 PM ADDED : செப் 06, 2026 07:42 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

விருத்தாசலம்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் புரோக்கர்கள் ஆதிக்கத்தால் நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

சொர்ணவாரி நெல் அறுவடை தீவிரமடைந்த நிலையில், மாவட்டம் முழுவதும், 120க்கும் அதிகமான நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக விவசாயிகளிடம் இருந்து நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டன. ஆனால், சேமிப்பு கிடங்குகளில் இடப்பற்றாக்குறை காரணமாக, கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை ஏற்றிச் செல்லாமல் காலம் தாழ்த்தப்பட்டது.

இதனால், மாலை நேரங்களில் பெய்யும் திடீர் மழையில் நனைந்து நெல்மணிகள் முளைக்கும் அவலம் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்த இரு வாரங்களுக்கு முன் விரிவாக செய்தி வெளியானது. இதையடுத்து, சேமிப்புக் கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகளை அகற்றும் பணி துவங்கியது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு வரை, மதுரை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு, 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், விருத்தாசலம் ரயில் நிலையத்தில் இருந்து சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

அதுபோல், நேற்று முன்தினம் சென்னை குரோம்பேட்டை நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிற்கு 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள், சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டன.

இருப்பினும், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல் மூட்டைகள் அகற்றப்படவில்லை. சேமிப்புக் கிடங்குகள் காலியானதும், கொள்முதல் நிலையங்களில் இருந்து மூட்டைகளை ஏற்றி சேமிக்க வேண்டியது, நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகத்தின் பொறுப்பாக இருப்பினும், அவர்கள் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும், ஒவ்வொரு நேரடி கொள்முதல் நிலையங்களிலும், வேளாண் அதிகாரிகள் புள்ளிப் பட்டியலின் படி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்யப்படுவது வழக்கம். ஆனால், பட்டியலை முறைகேடாக பயன்படுத்திய சில புரோக்கள், போலியான அடங்கல் சான்றுடன், பிற மாவட்ட நெல் மூட்டைகளையும் விற்பனை செய்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் விருத்தாசலம், அதனைச் சுற்றியுள்ள கொள்முதல் நிலையங்களில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படாமல் திறந்தவெளியில் குவிந்து கிடக்கிறது.

வேளாண்துறை சமர்பித்த அடங்கல் விபரங்களுக்கு அதிகமாக, ஒவ்வொரு கொள்முதல் நிலையங்களிலும் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக அறிக்கை தெரிவித்தது.

எனவே, கொள்முதல் நிலையங்களுக்கு அனுமதித்த அளவை விட கூடுதல் நெல் மூட்டைகளை விற்பனைக்கு எடுக்க வேண்டாம் என நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாகம் மூலம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

வேளாண் மற்றும் கொள்முதல் நிலைய ஊழியர்கள் முறைகேடுகளால், ஒரு மாத காலமாக திறந்த வெளியில், நெல் மணிகளை மூடிவைத்து காத்திருக்கும் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். மேலும், கடந்தகால திராவிட ஆட்சிகளை போல, த.வெ.க., ஆட்சியிலும் விவசாயிகள் வஞ்சிப்பது தொடர்கிறதே என அவர்கள் புலம்புகின்றனர்.

எனவே, கலெக்டர் உரிய விசாரணை செய்து, கொள்முதல் நிலையங்களில் குவிந்து கிடக்கும் நெல் மூட்டைகளை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து எம்.அகரம் விவசாயிகள் கூறுகையில், ' சில புரோக்கர்கள் துணையுடன் விவசாயிகள் பெயரில் போலியான அடங்கல் சான்று கொடுத்து, நெல் மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டது தெரிகிறது.

இதனால், எம்.அகரம் கிராமத்தில் 192 ஏக்கருக்கு உண்டான 13 ஆயிரம் சாக்கு மூட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு விட்டதாகவும், கூடுதலாக வரும் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டாம் என மண்டல அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இப்பகுதி விவசாயிகள் ஒரு மாத காலமாக நெல் மணிகளுடன் காத்திருக்கும் நிலையில், 13 ஆயிரம் சாக்கு மூட்டைகள் எப்படி நிரம்பியிருக்கும்.

முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகளால், விவசாயிகள் மாதக்கணக்கில் காத்திருக்க வேண்டிய அவலம் தொடர்கிறது. இது குறித்து கலெக்டரிடம் விவசாயிகள் சங்கம் சார்பில் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. மழைக்காலம் துவங்கிய நிலையில், தார்பாய் மூலம் எத்தனை நாட்கள் நெற்பயிர்களை பாதுகாக்க முடியும். இயற்கை இடர்பாடுகளை கடந்து விவசாயம் செய்தாலும், புரோக்கர்கள் தொந்தரவு மீளா துயரில ஆழ்த்துகிறது' என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us