/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விதிமீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை... பாயுமா; மாவட்டத்தில் புற்றீசலாக கடைகள் அதிகரிப்பு
/
விதிமீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை... பாயுமா; மாவட்டத்தில் புற்றீசலாக கடைகள் அதிகரிப்பு
விதிமீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை... பாயுமா; மாவட்டத்தில் புற்றீசலாக கடைகள் அதிகரிப்பு
விதிமீறும் பட்டாசு கடைகள் மீது நடவடிக்கை... பாயுமா; மாவட்டத்தில் புற்றீசலாக கடைகள் அதிகரிப்பு
ADDED : அக் 09, 2024 06:15 AM
விருத்தாசலம் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, மாவட்டத்தில் விதி மீறும் பட்டாசு கடைகளை கண்காணிப்பதுடன், கள்ளச்சந்தையில் விற்பனையை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தீபாவளி பண்டிகையில் பட்டாசு முக்கிய இடத்தை பிடிக்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புத்தாடை அணிந்து, பட்டாசு வெடிப்பது வழக்கம். பட்டாசு விபரீதம் புரியாத சிறுவர்கள் சிலர், முன்னெச்சரிக்கை இல்லாமல் தீ விபத்தில் சிக்கி காயமடைவது வழக்கம். இதற்காக, அந்தந்த தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் சார்பில் பள்ளிகள், பொதுமக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அதுபோல், பட்டாசு தொழிற்கூடம், உரிமம் பெற்ற மற்றும் உரிமம் கோறும் பட்டாசு கடைகளில் வருவாய்த்துறை, தீயணைப்பு மற்றும் போலீசார் என அதிகாரிகள் ஒருங்கிணைந்து தடையில்லா சான்று தரும் அதிகாரிகள் நேரில் களஆய்வு செய்வது வழக்கம். அப்போது, அவசர கால விபத்துகளில் வெளியேறும் வகையில் இருபுற வழிகள், புதுப்பிக்கப்பட்ட மின்சாதன ஒயர்கள், மின் விளக்குகள் மற்றும் மணல் மூட்டைகள், தண்ணீர் தொட்டி போன்ற தீயணைப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
மேலும், சிகரெட், பீடி போன்ற எளிதில் தீப்பற்றும் பொருட்களை உபயோகிக்க கூடாது போன்ற விழிப்புணர்வு பதாகைகளை கடைகளுக்கு முன் பொருத்தியிருக்க வேண்டும். இதன் மூலம் சேமிப்பு குடோன்கள், பட்டாசு கடைகளில் பெருமளவு விபத்துகள் தவிர்க்கப்படும்.
கட்டுப்பாடுகள் அதிகம் இருப்பதால், புதிதாக உரிமம் வாங்குவதில் பல்வேறு சிரமங்கள் உள்ளன.
பட்டாசு கடைக்கு உரிமம் பெறாமல் விற்பனை செய்தல், சேமித்து வைத்தல் ஆகியன வெடிமருந்துச் சட்டம் 1884-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம். ஆனால், ஆண்டுதோறும் விதிமுறைகளை மீறி புற்றீசல்போல பட்டாசு கடைகள் திறக்கப்படுகின்றன.
எனவே, விபத்தில்லா தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட உரிமம் பெறாமல் பட்டாசுகள் விற்பனை செய்வோர், அவற்றை சேமித்து வைப்போரை கண்டறிந்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதுகாப்பு அம்சங்கள் எதுவும் இல்லாத கடைகளில் விபத்துகள் நிகழ்ந்தால் உயிர் பலி தவிர்க்க முடியாமல் போகும்.
எனவே, பட்டாசு கடைகளுக்கு அனுமதி பெருவோர் குறித்து எஸ்.பி., தீவிர சோதனையில் ஈடுபட வேண்டும்.
ரூ.40 ஆயிரம் போதும்
வருவாய்த்துறை, தீயணைப்பு, போலீஸ் என அரசு அதிகாரிகளிடம் அனுமதி பெற்றால் மட்டுமே பட்டாசு கடை நடத்த முடியும். இதற்கென விதிமுறைகள் இருந்தாலும் குறுக்கு வழியில் சிலர் அனுமதி பெறுவது தொடர்கிறது. அதுபோல், நடப்பாண்டிலும் 40 ஆயிரம் ரூபாய் செலவழித்தால் பட்டாசு கடைக்கு அனுமதி கிடைத்து விடுகிறது என தெரிகிறது. இதற்காக ஓய்வுபெற்ற சில அதிகாரிகள் மூலம் தனித்தனியாக கவனிப்பு வழங்கி, பட்டாசு கடைக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
அதிக சப்தம் ஆபத்து
மேலும் அதிக சப்தமுள்ள பட்டாசுகளை உள்ளூர் கிடங்குகளில் தயாரிக்கப்படுகின்றன. இவை வெடித்து சிதறும்போது காகித துகள்கள் அதிகளவு சிதறுவதுடன், சப்தமும் அதிகளவு கேட்கிறது.
இதனை பொது மக்கள் விரும்பி வாங்குவதால், விற்பனையும் அதிகமாக உள்ளது. ஆனால், அதிகளவு மருந்து திணித்து உருவாக்கப்படும் பட்டாசுகளால் அவற்றை பயன்படுத்துவோருக்கு மிகுந்த ஆபத்து காத்திருக்கிறது. எனவே, இதுபோன்ற பட்டாசு உற்பத்தியை வருவாய்த்துறை கவனித்து தடுக்க வேண்டும்.