ADDED : ஜூன் 24, 2026 01:04 AM

நெய்வேலி: இந்தியாவின் துாய்மையான எரிசக்தி மாற்றத்தை வலுப்படுத்தவும், நாட்டின் 'விக்சித் பாரத்' (வளர்ச்சியடைந்த இந்தியா) மற்றும் நிகர பூஜ்ஜிய கார்பன் இலக்கை ஆதரிப்பதற்கு முக்கிய நடவடிக்கையாக, என்.எல்.சி., - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
புதுடில்லியில் என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் வணிக மற்றும் வணிக மேம்பாட்டிற்கான தலைமை பொது மேலாளர் அனுராக் மிட்டல், ஐ.ஓ.சி.எல்., மாற்று எரிசக்திக்கான தலைமை பொது மேலாளர் மனோஜ் நந்தா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
என்.எல்.சி., நிதித்துறை இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா, ஐ.ஓ.சி.எல்., இயக்குநர் சுமன் குமார், ஐ.ஓ.சி.எல்., செயல் இயக்குநர் ஜாய்தீப் சவுத்ரி, என்.எல்.சி.ஐ.எல்., செயல் இயக்குநர் தேவேந்திர பிரதாப் சிங் முன்னிலை வகித்தனர்.
தமிழகத்தில் பெரிய அளவிலான புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை உருவாக்குவதே ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம். இதன் மூலம் உற்பத்தியாகும் மின்சாரம், மூன்றாம் தரப்பினர் மற்றும் வணிக, தொழில்முறை நுகர்வோருக்கும், மின் விநியோக நிறுவனங்கள், மின்சார பரிவர்த்தனை மையங்களுக்கும் வழங்கப்படும்.
மின்சார வாகன இயக்கம் மற்றும் பசுமை செயற்கை எரிபொருட்கள் அல்லது வேதிப்பொருட்களின் பயன்பாடு மற்றும் உற்பத்தி போன்ற நவீன தேவைகளுக்கும் இந்த மின்சாரம் பயன்படுத்தப்படும். இத்திட்டத்தின் கீழ் சூரிய ஒளி, காற்று மற்றும் கலப்பு மின்சாரம் அல்லது இவற்றின் கூட்டு இணைப்பு மூலம் மின்சாரம் தயாரிக்கப்படும்.
இதுகுறித்து என்.எல்.சி., தலைவர் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், 'துாய்மையான மற்றும் நிலையான எரிசக்தி துறைகளில் என்.எல்.சி., நிறுவனத்தின் உத்திசார் பன்முகத்தன்மைக்கு ஐ.ஓ.சி.எல்., நிறுவனத்துடனான இந்த கூட்டாண்மை முக்கிய மைல் கல்.
இது நம்பகமான மற்றும் பசுமை எரிசக்தி தீர்வு மூலம் நிலையான வளர்ச்சி, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் தேசக் கட்டமைப்பு ஆகியவற்றில் இரு நிறுவனங்களுக்கும் உள்ள அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது' என கூறி உள்ளார்.
