/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
/
விவசாய தொழிலாளர்கள் ஆர்.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : பிப் 01, 2024 05:51 AM

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை, விவசாய தொழிலாளர் கூட்டமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
விருத்தாசலம் அடுத்த கம்மாபுரம், வளையமாதேவி, கீழ் வளையமாதேவி, சாத்தப்பாடி, ஊ.ஆதனுார், கத்தாழை, மும்முடிச்சோழகன் உள்ளிட்ட கிராமங்களில், என்.எல்.சி., நிர்வாகம் 2வது சுரங்க விரிவாக்க பணிக்காக கடந்த 2000ம் ஆண்டு நிலங்களை கையகப்படுத்தியது.
இந்த நிலங்களுக்கு சமமான இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு மற்றும் நிறுத்தி வைக்கப் பட்டுள்ள கருணைத்தொகை இதுவரை வழங்கவில்லை.
இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் கூட்டமைப்பு சார்பில், தொடர் முழக்க ஆர்ப்பாட்டம் கடந்த சில நாட்களாக கம்மாபுரம், வளையமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நடந்து வருகின்றன.
அதன் ஒருபகுதியாக, விவசாய தொழிலாளர் கூட்டமைப்பை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்டோர், நேற்று விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மனுவை பெற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.