துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., பிரமுகர் கைது
துப்பாக்கியை காட்டி மிரட்டிய அ.தி.மு.க., பிரமுகர் கைது
ADDED : ஜன 30, 2026 07:12 AM

நடுவீரப்பட்டு: கடலுார் அருகே குவாரியில் மண் எடுத்த பிரச்னையில், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளரை துப்பாக்கி காட்டி மிரட்டிய அதே கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார் மாவட்டம், நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் கொஞ்சிக்குப்பத்தை சேர்ந்தவர் வினோத், 40; அ.தி.மு.க., கடலுார் ஒன்றிய செயலாளராக உள்ளார். இவருக்கு சி.என்.,பாளையம் புத்திரன்குப்பத்தில் செம்மண் குவாரி உள்ளது. இந்த குவாரிக்கு அருகில் குழந்தைக்குப்பத்தை சேர்ந்த அ.தி.மு.க., ஒன்றிய விவசாய அணி துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தியின் குவாரி இயங்கி வருகிறது.
கிருஷ்ணமூர்த்தி தமக்கு சொந்தமான குவாரியில் செம்மண் அள்ளும் போது வினோத்தின் இடத்திலும் சேர்த்து மண் அள்ளியதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.
இது தொடர்பாக நேற்று இரு தரப்பினரிடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது, கிருஷ்ணமூர்த்தியின் மகன் கோபால் என்பவர், தான் வைத்துள்ள உரிமம் பெற்ற கை துப்பாக்கியை எடுத்து வினோத் மற்றும் அவரது ஆதரவாளர்களை மிரட்டினார்.
இதுகுறித்த புகாரின்பேரில், கொலை செய்ய முயற்சி உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து கோபாலை, 36; கைது செய்து துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட கோபால், அ.தி.மு.க.,மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணை செயலாளராக உள்ளார். அ.தி.மு.க., நிர்வாகியை அக்கட்சி பிரமுகரே துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
