ADDED : செப் 11, 2026 06:51 PM
விருத்தாசலம்: மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதிக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டி அனைத்து கட்சி சார்பில், மின் துறை அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டது.
மங்கலம்பேட்டை பேரூராட்சி பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில வாரங்கள் காலை, மாலை நேரங்களில் அறிவிக்கப்படாத மின் வெட்டு நிலவி வருகிறது. இதனால், அனைத்து தரப்பு மக்களும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய குடியரசு கட்சி மாநில பொதுச் செயலாளர் மங்காபிள்ளை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநில துணை தலைவர் இக்பால் ஆகியோர் தலைமையில், அனைத்து கட்சி நிர்வாகிகள் நேற்று கோ.பூவனுார் துணை நிலையத்தில், உபகோட்ட பொறியாளர் பாரதியை சந்தித்து மனு அளித்தனர்.
அதில், கடந்த சில வாரங்களாக மங்கலம்பேட்டையில் முன் அறிவிப்பின்றி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே, தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
மனுவை பெற்றுக்கொண்ட பொறியாளர் பாரதி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
