/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் பெண்ணையாற்றில் கரை பலப்படுத்த ஒதுக்கீடு... ரூ.93 கோடி; விரைவில் பணி துவங்கப்படும் என எதிர்பார்ப்பு
/
கடலுார் பெண்ணையாற்றில் கரை பலப்படுத்த ஒதுக்கீடு... ரூ.93 கோடி; விரைவில் பணி துவங்கப்படும் என எதிர்பார்ப்பு
கடலுார் பெண்ணையாற்றில் கரை பலப்படுத்த ஒதுக்கீடு... ரூ.93 கோடி; விரைவில் பணி துவங்கப்படும் என எதிர்பார்ப்பு
கடலுார் பெண்ணையாற்றில் கரை பலப்படுத்த ஒதுக்கீடு... ரூ.93 கோடி; விரைவில் பணி துவங்கப்படும் என எதிர்பார்ப்பு
ADDED : ஆக 09, 2025 07:33 AM

கடலுார், ஆக. 9- கடலுார் பெண்ணையாற்றின் கரையை பலப்படுத்த 93 கோடி ரூபாய் மதிப்பில்பணிகள் விரைவில் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வங்கக்கடலில் உருவான 'பெஞ்சல்' புயல் கடந்த டிச., 30ம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் புதுச்சேரியில் 50 செ.மீ., கடலுாரில் 23 செ.மீ., மழை கொட்டித்தீர்த்து வெள்ளக் காடாக மாறியது. அதைத்தொடர்ந்து புயல் கடந்த சென்ற பாதையின் பகுதி முழுவதும் அதிகனமழை கொட்டியது.
அதாவது, திண்டிவனம், மைலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி போன்ற பகுதிகளில் பேய் மழை பெய்தது. இதன் காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சாத்தனுார் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது.
அணைக்கு உபரியாக வந்த தண்ணீரை முழுவதுமாக பாதுகாப்பு கருதி வெளியேற்றினர். இதனால் முதல் நாள் 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடி நீர், கடலுார் சுப உப்பலவாடி, புதுக்குப்பம் முகத்துவாரங்கள், வழியாக சென்று வங்கக்கடலில் கலந்தது.
இந்த வெள்ள நீர் முழுமையாக வங்கக்கடலுக்கு செல்லாமல் வடக்கு கரையோர கிராமங்களான நாணமேடு, உச்சிமேடு கிராமங்களும், தெற்கு கரையோர கிராமங்களான கண்டக்காடு, தாழங்குடா கிராமங்களிலும் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
வடக்கு கரையோரம் பெண்ணையாற்றில் கரை அமைத்தும், உடைப்பு ஏற்பட்டு கிராமங்கள் மூழ்கின. தெற்கு கரையோரம் தடுப்பணை அமைக்கவில்லை. இதனால், பல எக்டர் நிலங்கள் மண்மேடிட்டும், பள்ளங்களாகவும் மாறின.
பெண்ணையாற்றின் மையத்தில் பல எக்டர் பரப்பளவில் மணல்திட்டு, கருவேல மரங்கள் வளர்ந்துள்ளன. இந்த மணல் திட்டுக்களால் தான் வெள்ளநீர் ஆற்றின் மையத்தில் ஓடாமல் வடக்கு, தெற்கு கரையோரமாக இரு பிரிவாக பிரிந்து செல்வதால் இரு கரையோர கிராமங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
பெண்ணையாற்றில் பாதிப்பு ஏற்படுத்தும் பகுதிகளில் முதற்கட்டமாக கடலுார், மஞ்சக்குப்பம் முதல் குண்டு உப்பலவாடி கிராம் வரை நபார்டு வங்கி திட்டத்தின் கீழ் 9.90 கோடி ரூபாய் மதிப்பில் 160 மீ., ஆர்.சி.சி., தடுப்புச்சுவர், 575 மீ., சரிவுச்சுவர் அமைப்பது.
நகரம் மற்றும் கிராமங்களில் பெய்கின்ற மழைநீர் வடிவதற்கு வடிகால் மதகு அமைப்பது. பெண்ணையாற்றின் வலது புற கரையை 2,100 மீ., பலப்படுத்தும் பணி, ஆற்றின் உட்பகுதியில் உள்ள மணல் திட்டுகளை அகற்றுவது உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
அதைத் தொடர்ந்து தற்போது 2வது கட்டமாக 57 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையில், குண்டு உப்பலவாடி பாலத்தில் இருந்து 900மீ., கரை பலப்படுத்த கருங்கல் கொட்டப்படுகிறது.
பெண்ணையாற்றின் மையத்தில் உள்ள மணல் திட்டு முழுவதுமாக அகற்றி கண்டக்காடு, தாழங்குடா உள்ளிட்ட பகுதிகளில் கரைகள் பலப்படுத்தப்பட உள்ளன. கண்டக்காடு மக்களின் கோரிக்கையை ஏற்று அமைச்சர் பன்னீர்செல்வம் இந்த பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.
பண்ருட்டி அடுத்த எலந்தம்பட்டு கெடிலம் ஆற்றில் தடுப்பணை 36 லட்சம் ரூபாய் மதிப்பில் பலப்படுத்தப்பட உள்ளன. ஆக மொத்தம் இரு பணிகளும் 93 கோடி ரூபாய் மதிப்பில் செய்யப்பட உள்ளன. இதற்கான பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

