அங்கன்வாடி ஊழியர்கள் கைது விருத்தாசலத்தில் பரபரப்பு
அங்கன்வாடி ஊழியர்கள் கைது விருத்தாசலத்தில் பரபரப்பு
ADDED : பிப் 19, 2026 04:58 AM

விருத்தாசலம்: சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்களின் கூட்டமைப்பினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.
விருத்தாசலம் பாலக்கரையில், தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், தொடர் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிதேவன் தலைமை தாங்கினார்.
இதில், ஐகோர்ட் உத்தரவின்படி அகவிலைபடியுடன் ஓய்வூதியம் வழங்க வேண்டும்; அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சத்துணவு பணியாளர்களே செயல்படுத்த வேண்டும்; ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்; என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், பகல் 12:00 மணியளவில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 33 பேரை கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
