/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
/
மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஏப் 16, 2025 08:23 PM
கடலுார் முதல்வரின் மாநில இளைஞர் விருதுக்கு தகுதியான இளைஞர்கள் வரும் மே 3ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறியுள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
இளைஞர்களின் சமுதாய சேவையை பாராட்டி, ஊக்குவிக்கும் வகையில் சிறப்பாக சேவை செய்தவர்களுக்கு 2025ம் ஆண்டுக்கான 'முதலமைச்சர் மாநில இளைஞர் விருது' வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தின விழாவில் வழங்கப் படுகிறது.
விருதிற்கு 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். விருது பெற கடந்த 01.04.2024 அன்று 15 வயது நிரம்பியவராகவும், 31.03.2025 அன்று 35 வயதுக்குள்ளாகவும் இருக்க வேண்டும்.
கடந்த 2024-25ம் நிதியாண்டில்செய்த சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும். விருதிற்கு விண்ணப்பிக்கும் இளைஞர்கள் குறைந்த பட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும். சமூக சேவைகள், சமுதாய நலன், பொது மக்கள் வளர்ச்சிக்கானதாக இருக்க வேண்டும்.
மத்திய, மாநில அரசு பணியில் உள்ளவர்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் கல்வித்துறையில் பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்க முடியாது.
விருதிற்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் ரொக்கம், பாராட்டு சான்று மற்றும் தங்க பதக்கம் வழங்கப்படும்.
தகுதியானவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 03.05.2025 மாலை 4.00 மணி வரை. உரிய ஆவணங்கள் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.