/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க... அனுமதிக்கப்படுமா?; 127 ஆண்டு பழமையான கட்டடத்தை பாராமரிக்க வாய்ப்பு
/
பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க... அனுமதிக்கப்படுமா?; 127 ஆண்டு பழமையான கட்டடத்தை பாராமரிக்க வாய்ப்பு
பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க... அனுமதிக்கப்படுமா?; 127 ஆண்டு பழமையான கட்டடத்தை பாராமரிக்க வாய்ப்பு
பழைய கலெக்டர் அலுவலகத்தில் அரசு அலுவலகங்கள் இயங்க... அனுமதிக்கப்படுமா?; 127 ஆண்டு பழமையான கட்டடத்தை பாராமரிக்க வாய்ப்பு
ADDED : ஆக 27, 2024 04:57 AM

கடலுா : கடலுாரில் வாடகை கட்டங்களில் இயங்கும் அரசு அலுவலகங்கள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடலுார், மஞ்சக்குப்பம் மைதானம் அருகே அமைந்துள்ளது ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கலெக்டர் அலுவலகம். இக்கட்டடம் கடந்த 1896ம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு 1897ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. 127 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் கம்பீரமாக உள்ளது.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் இந்திய தேர்தல் ஆணையத்தில் உயர் பதவியில் பணியாற்றிய கிளைவ் என்பவர் கடலுார் வருகை தந்தபோது, கலெக்டர் அலுவலகம், கலெக்டர் முகாம் அலுவலகம் ஆகியவற்றை பார்த்து வியந்துள்ளார். கட்டடத்தின் உறுதித் தன்மையும், வனப்பும் குறையாமல் இருப்பதைப் பார்த்து ஆங்கிலேயர் ஆட்சியை நினைவு கூர்ந்தார்.
இவ்வளவு பரந்து விரிந்த கட்டடத்தில் இது வரை எந்த ஒரு இடத்திலும் பழுது ஏற்பட்டதில்லை.
காலப்போக்கில் அனைத்து அலுவலகங்களும் ஒரே இடத்தில் இயங்க வேண்டும் என்பதால் கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது, புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டது. கலெக்டர் அலுவலகம் இங்கு இருந்த வரை நன்கு பராமரிக்கப்பட்டு வந்தது. புதிய கட்டடத்திற்கு இடமாற்றம் செய்த பின் பராமரிப்பின்றி கிடக்கிறது.
தற்போது முதல் தளத்தில் மாவட்ட வன அலுவலகம் மட்டுமே இயங்கி வருகிறது. கீழ் தளத்தில் அரசு அருங்காட்சியகம், மாவட்ட கருவூல அலுவலகம் மட்டும் இயங்கி வருகிறது.
மீதியுள்ள இடங்கள் காலியாக இருப்பதால் பறவைகள், வவ்வால்கள் வசிக்கும் இடமாக மாறிப்போனது.
இக்கட்டடம் பராமரிக்கப்படாததால் சுவர்களில் உள்ள வண்ணங்கள் பெயர்ந்து விழுகின்றன. சில இடங்களில் மழைநீர் சாரல் காரணமாக கட்டடம் வீணாகும் அவலம் ஏற்பட்டுள்ளது.
தற்போது, மாவட்டத்தில் இன்னும் எத்தனையோ அலுவலகம் தனியார் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக மகளிர் திட்டம், மின்வாரிய அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகம், நுாலகங்கள், கூட்டுறவு சொசைட்டிகள் உட்பட பல்வேறு அலுவலகங்கள் வாடகைக் கட்டடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்தால் பழைய நினைவுச் சின்னமாக விளங்கும் கட்டடம் பராமரிக்கப்படும்.
அரசுக்கும் வருவாய் கிடைக்கும். எனவே, தனியார் இடங்களில் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களை பழைய கலெக்டர் அலுவலக கட்டடத்தில் செயல்பட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.