/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பொன்விழா கொண்டாடிய இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளி சாதனையாளர்களை உருவாக்கி அசத்தல்
/
பொன்விழா கொண்டாடிய இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளி சாதனையாளர்களை உருவாக்கி அசத்தல்
பொன்விழா கொண்டாடிய இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளி சாதனையாளர்களை உருவாக்கி அசத்தல்
பொன்விழா கொண்டாடிய இறையூர் அருணா மேல்நிலைப்பள்ளி சாதனையாளர்களை உருவாக்கி அசத்தல்
ADDED : மே 17, 2025 11:43 PM

திட்டக்குடி அடுத்த இறையூர் அருணா மேல்நிலைப் பள்ளி பொன்விழா ஆண்டை கொண்டாடியுள்ளது.
கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த இறையூர் கிராமத்தில் அருணா பள்ளி உள்ளது. திட்டக்குடி, பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்களின் குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக 1973ம் ஆண்டு அருணா சர்க்கரை ஆலை நிர்வாகி மருதப்பிள்ளை என்பவர் இப்பள்ளியை துவக்கினார்.
பெருநிலக்கிழார்கள் முத்துக்குமாரசாமி, சண்முகம், முருகேசன் ஆகியோர் பள்ளி நிறுவுவதற்கு காரணமாக இருந்தனர். கடந்த 1978ம் ஆண்டு மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பள்ளி துவங்கிய 1973 முதல் 1988ம் ஆண்டு வரை, தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற குஞ்சிதபாதம், 15 ஆண்டுகள் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து பள்ளியை திறம்பட வழிநடத்தி தேர்ச்சி விழுக்காட்டில் மாவட்டத்திலேயே சிறந்த பள்ளியாக முன்னேற செய்தார்.
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகள் நலனில் அக்கறையோடு செயல்படும் இப்பள்ளி நாளடைவில் விருத்தாசலம், நெய்வேலி, திட்டக்குடி வட்டாரத்தில் உள்ள அரசு அலுவலர்கள், ஊழியர்களின் குழந்தைகளும் விரும்பிப்பயிலும் அளவிற்கு தரத்தில் உயர்ந்து
விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளின் வாழ்க்கையை கல்விதரத்தில் உயரச் செய்து, உயரிய பதவிகளை எட்டிப்பிடிக்க வழிவகுத்தது. 1999ம் ஆண்டு முதல் இப்பள்ளியை தொழிலதிபர் ஆறுமுகம் தலைமையிலான நிர்வாகத்தினர் பொறுப்பேற்று வழி நடத்தினர்.
தற்போது பள்ளித் தலைவர் ஞானகணேசன், பள்ளி துணைத் தலைவர் சிவசங்கர், பள்ளிச் செயலர் ஞானப்பிரகாசம், பொருளாளர் திருஞானசம்மந்தம் உள்ளடக்கிய பள்ளி நிர்வாகக்குழு திறம்பட நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு பள்ளி பொன்விழா நிறைவையொட்டி, தமிழ்நாடு அரசின் முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு, கலெக்டர் அருண் தம்புராஜ் விழாவில் பங்கேற்று பொன்விழா வளைவை திறந்து வைத்தனர்.
பள்ளியில் 2024--25ம் கல்வியாண்டில் 1,009 மாணவர்களும், 795 மாணவிகள் என, மொத்தம் 1,804 பேர் படிக்கின்றனர். ஆண், பெண் இருபாலருக்குமான தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம், மாணவர் செஞ்சிலுவைச் சங்கம், பாரத சாரண, சாரணீயர் சங்கம் போன்ற சேவை இயக்கங்களின் வாயிலாக மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கப்படுகிறது.
சிறப்பு முகாம்கள் நடத்தி போதைப் பழக்கங்கள், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சார்ந்த விழிப்புணர்வு ஊர்வலங்கள், கிராமங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் நடுதல் போன்ற சேவை நிகழ்வுகளிலும் இப்பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.
தலைமை ஆசிரியருக்கு விருது
பொன்விழா கண்ட இப்பள்ளிக்கு பெருமை சேர்க்கும் விதமாக, பள்ளி தலைமையாசிரியர் கோபி, பள்ளி படிப்பை பாதியில் நிறுத்திய 23 மாணவர்களை மீண்டும் பள்ளி படிப்பிலும், உயர்கல்வியிலும் சேர்க்க பாடுபட்டார்.
இதற்காக, மாவட்ட நிர்வாகம் சார்பில் 2023ம் ஆண்டு அப்போதைய கலெக்டர் அருண்தம்புராஜ் விருது வழங்கி கவுரவித்தார். ஆசிரியர் பணியில் 21 ஆண்டுகள் அனுபவம் மிக்க தலைமை ஆசிரியர் கடந்த 10 ஆண்டுகளாக இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணிபுரிகிறார்.
வழிகாட்டிய ஆசிரியர்கள் முன்னாள் மாணவர் பெருமிதம்
அருணா சர்க்கரை ஆலை நிர்வாகத்தால் தோற்றுவிக்கப்பட்டு, சிறப்பாக வழி நடத்தப்படும் பள்ளி இது. இப்பள்ளியில் 1999 - 2001ம் ஆண்டில் எனது மேல்நிலைக்கல்வியை பயின்றேன். எங்கள் ஆசிரியர்கள் மிகவும் கண்டிப்புடனும், பாசத்துடனும் நடந்துகொள்வர்.
வேதியியல் ஆசிரியர் ஆரோக்கியதாஸ், தமிழாசிரியை மீனாட்சியம்மாள், இயற்பியல் ஆசிரியர் செந்தில்நாதன்,கணித ஆசிரியர் தர்மலிங்கம், இயற்பியல் ஆசிரியர் ராமசாமி, தமிழாசிரியர் ராமலிங்கம் போன்றோர் சிறந்தவழிகாட்டியாக இருந்தனர்.
ஆசிரியர்கள் எங்கள் மீது செலுத்திய அன்பு தான், பாடத்தின் மீது அக்கறை ஏற்பட காரணமாகஇருந்தது. உடற்கல்வி ஆசிரியர் கணேசன், பள்ளி மாணவர்களை ஒழுக்கத்துடன், கட்டுப்பாட்டுடனும்வளர்த்தவர்களில் முக்கியமானவர். டாக்டர்கள், என்ஜினியர்கள், அரசு உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள் என ஏராளமானமனிதர்களை பள்ளி உருவாக்கி வருகிறது என்பது எங்கள் எல்லோருக்கும் பெருமையாக உள்ளது.
உயர் பதவிகளில் சாதனை : முன்னாள் ஆசிரியர்
பொன்விழா கண்ட அருணா மேல்நிலைப்பள்ளியில் பயின்று, ஆசிரியராக பணியாற்றி ஓய்வும்பெற்றுவிட்டேன் என்பதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.
பல அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்கள் சேர்வதே குறைவாகஉள்ள நிலையில், அருணா மேல்நிலைப்பள்ளியின் சிறப்பான செயல்பாடுகளால், இங்கு சேர்க்கை பெறுவதே பலருக்குசிம்ம சொப்பனமாகவே உள்ளது.
விளையாட்டு, கலைக்கழக போட்டிகளில் அருணா பள்ளி பங்கேற்கிறது என்றாலே மற்ற பள்ளிகளில் அமர்க்களமாக இருக்கும். தமிழ், கணினி பாடத்தில் மாநிலத்தில் முதலிடம், அறிவியல் கண்காட்சியில் மாநிலத்தில்முதலிடம், கலையருவி கலைத்திருவிழா என மாநில அளவில் பல்வேறு சாதனைகளை செய்துள்ளது.
இப்பள்ளியில் பயின்ற பலர் மருத்துவர்களாகவும், பிற துறைகளில் உயர்பதவிகளிலும் சாதித்து வருகின்றனர். இத்தகைய பள்ளியின் இன்றைய நிர்வாகமும், ஆசிரியர்களும், மாணவர்களும் பள்ளியை அடுத்த நிலைக்கு எடுத்துச்செல்வார்கள் என்பதில் துளியும் ஐயமில்லை.
தடம் பதிக்க வேண்டும் உதவி தலைமை ஆசிரியை
இப்பள்ளியில் 32 ஆண்டுகளாக ஆசிரியையாக பணிபுரிகிறேன். என்னுடைய மாணவர்கள் மருத்துவம், ஊடகம், பொறியியல், கல்வி மற்றும் வருவாய்த்துறை உட்பட பல்வேறுதுறைகளிலும் மிகச்சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
அவர்களின் வளர்ச்சி என்னை பெருமையடைய செய்கிறது.கல்வி இணை செயல்பாடுகள், புற செயல்பாடுகள் மாணவர்களின் ஆளுமைத்திறனை அதிகரிக்கும் என்பதற்காக மாணவர்களின்திறனை மேம்படுத்தும் செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
எங்கள் பள்ளி, 1992- 93ம் ஆண்டு நடந்த ஜவகர்லால் நேரு அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்றது. வீட்டுக்கு ஒரு விஞ்ஞானி போட்டி, நெய்வேலி புத்தக கண்காட்சியில் நடந்த வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்றது.
நல்லுார் வட்டாரத்தில் பெண் கல்வியை ஊக்கப்படுத்தியமைக்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் பாராட்டுக்கேடயம் வழங்கப்பட்டது. பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கிலம் மற்றும் அறிவியல் பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சிமற்றும் 100க்கு 100 மதிப்பெண் பெற வைத்தமைக்காக மாவட்ட கலெக்டரிடம் பரிசு, தமிழறிஞர் நன்னன் அறக்கட்டளைபாராட்டு சான்றிதழ் பெற்றேன்.
'தினமலர்' ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், இறையூர் மற்றும் கள்ளக்குறிச்சியில் பங்கேற்றுஅறிவியல் பாடம் குறித்து ஆலோசனை வழங்கினேன். அறிவியலின் உச்சமாக அடல் டிங்கரிங் லேப் உருவாக்கப்பட்டு, மாணவர்களின்திறமைகள் வளர்த்தெடுக்கப்படுகிறது. பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் மாணவர்கள் ஏர் கிராப்டை உருவாக்கி நேர்த்தியாகபறக்கச்செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றனர். 32 ஆண்டுகளாக பல துறைகளில் மாணவர்களை ஊக்கப்படுத்தி, திறமைகளை வெளிக்கொணர்ந்து சாதனை புரிய வழிகாட்டியாய் இருப்பதில் மகிழ்ச்சி.
இப்பள்ளி மாணவர்கள் ஆட்சிப்பணி தேர்வுகளிலும் தடம் பதித்து வெற்றி பெற வேண்டும்என்பதே என் ஆசை.